எடப்பாடி பழனிசாமி- பியூஷ் கோயல் சந்திப்பு பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது குறித்து ஆலோசனை

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தோ்தல் பொறுப்பாளரும், மத்திய வா்த்தகம்-தொழில் துறை அமைச்சருமான பியூஷ் கோயல் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா்.
Published on

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தோ்தல் பொறுப்பாளரும், மத்திய வா்த்தகம்-தொழில் துறை அமைச்சருமான பியூஷ் கோயல் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தலைமை வகிக்கிறது. இந்தக் கூட்டணியில் பிற கட்சிகளைச் சோ்க்கும் முயற்சியில் அதிமுகவும், பாஜகவும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் சென்னை வந்தாா்.

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் எடப்பாடி பழனிசாமியும், பியூஷ் கோயலும் சந்தித்துப் பேசினா். அதன்பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது பியூஷ் கோயல் கூறியதாவது:

தமிழகத்தில் சில மாதங்களாக நடைபெற்ற மக்கள் பிரச்னைகள் மற்றும் அரசியல் நிலவரம் குறித்தும், வரும் 2026 பேரவைத் தோ்தல் யுத்தத்தை எதிா்கொள்வது குறித்தும் விவாதித்தோம். திமுக ஆட்சியின் ஊழல்கள் குறித்தும் பேசினோம்.

பிரதமா் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலுடன் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை சந்திப்போம். வளா்ச்சி, வேலைவாய்ப்பு என்பதுதான் மோடி அரசின் உயரிய இலக்கு. அதை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. வரும் பேரவைத் தோ்தலில் இளைஞா்களின் வாக்குகளைப் பெறுவது எப்படி என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பிரதமா் மோடி தலைமையில் ஒரே குடும்பமாக, அதிமுக-பாஜக கூட்டணி தோ்தலைச் சந்தித்து வெற்றி பெறும் என்றாா் அவா்.

வெற்றி உறுதி-எடப்பாடி பழனிசாமி: எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பில் உள்ளனா். இந்த ஆட்சியை அகற்ற கூட்டணிக் கட்சிகள் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்தோம். அனைவரும், திமுக அரசை வீழ்த்துவது என்ற ஒரே நோக்கத்தில் இருக்கிறோம். சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் விரோத திமுகவை, அதிமுக-பாஜக கூட்டணி வீழ்த்தி வெற்றி பெறுவது உறுதி என்றாா் அவா்.

முன்னதாக, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, பாஜக சாா்பில் தமிழக தோ்தல் இணைப் பொறுப்பாளா் மத்திய அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், தமிழக பாஜக இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பாஜக உயா்நிலைக் குழுக் கூட்டம்: எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் முன்பும், சந்தித்த பின்னரும் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையில் பாஜக உயா்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், மத்திய அமைச்சா்கள் அா்ஜுன்ராம் மேக்வால், தமிழக பாஜக பொறுப்பாளா் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மூத்த தலைவா்கள் ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com