

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி மலையில் 56.36 கோடி ரூபாய் செலவில் பொருநை அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பாக திறந்து வைத்தார். இன்று முதல் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.
இன்று காலையிலிருந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று அருங்காட்சியகத்தை காண்பதற்காக ஆர்வமுடன் காத்திருந்தனர். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அருங்காட்சியத்தை பார்வையிடலாம் என்றும் செவ்வாய்க்கிழமை மற்றும் சுதந்திர நாள், குடியரசு நாள், காந்தி ஜெயந்தி என மூன்று தினங்களுக்கு மட்டும் அருங்காட்சியகம் மூடப்படும் என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அருங்காட்சியத்தை மக்கள் காண வசதியாக நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து அருங்காட்சியத்திற்கு 11 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சனி ஞாயிறு கிழமையில் மட்டும் கூடுதலாக ஏழு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவித்திருந்தார்.
இந்த அருங்காட்சியகத்தில் 3500 ஆண்டுகளுக்கு முன் பழமையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அரவணை போல் காட்சி அளிக்கும் இந்த அருங்காட்சியத்தை மக்கள் சுற்றிப் பார்ப்பதற்கு ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
வயதானவர்கள் செல்வதற்காக பேட்டரி கார்கள் உள்ளே செயல்படுத்தப்பட்டுள்ளன. பெரியவர்களுக்கு இருபது ரூபாயும் சிறியவர்களுக்கு பத்து ரூபாய், பள்ளி மாணவியருக்கு ஐந்து ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது வெளிநாட்டை சேர்ந்த பயணிகளுக்கு 50 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்றுப் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் விதமாகவும், தமிழர்களின் நாகரிகமே உலக நாகரிகங்களின் முன்னோடி என்பதை அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்கவும் அமைக்கப்பட்டுள்ள 'பொருநை அருங்காட்சியகம்', நெல்லை ரெட்டியார்பட்டி மலை அடிவாரத்தில் சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் என்பது சுமார் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் உறுதி செய்துள்ளன. அந்த அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்களைப் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு தமிழர்களின் வீரத்தையும் அறிவையும் கொண்டு சேர்க்கவும் இந்த அருங்காட்சியகம் ஒரு சிறந்த களமாக உருவெடுத்துள்ளது. இன்று காலை முதல் ஏராளமான மக்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஆர்வத்துடன் அருங்காட்சியகத்திற்கு வருகை தந்து, தமிழர்களின் தொன்மையான வாழ்க்கை முறையை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
எப்படி இருக்கிறது அருங்காட்சியகம்?
அருங்காட்சியகத்தின் உள்ளே நுழைந்தவுடன், அறிமுக அரங்கம் பார்வையாளர்களை வரவேற்கிறது. அதனைத் தொடர்ந்து கொற்கை, சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு வாள்கள், கத்திகள், வெண்கலக் கண்ணாடிகள், அரிய வகை மணிகள் மற்றும் மட்பாண்டங்கள் போன்ற பல நூற்றுக்கணக்கான பொருட்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, பழைய கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான நாகரிக வளர்ச்சியை விளக்கும் விதமாக தனித்தனிப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, தாமிரபரணி நதிக்கரை சார்ந்த ஐவகை நிலங்களின் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) அமைப்பை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வரைபடங்களும், சிவகளை அகழாய்வின் மாதிரிக் குழிகளும் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.
பார்வையாளர்களின் வசதிக்காகப் பல்வேறு நவீன ஏற்பாடுகள் இங்கே செய்யப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள உதவும் ஆவணப்படத் திரையரங்கம், தொல்லியல் சின்னங்களை நேரடியாகப் பார்ப்பது போன்ற உணர்வைத் தரும் தத்ரூப மாதிரிகள் மற்றும் குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்குரிய மணல் சிற்பப் பகுதி போன்றவை அனைவரையும் ஈர்க்கின்றன. மேலும், 13 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அருங்காட்சியக வளாகத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு ஏதுவாக தமிழக அரசின் சார்பில் பேட்டரி வாகன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த வசதியைப் பயன்படுத்தி முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் களைப்பின்றி முழு அருங்காட்சியகத்தையும் சுற்றிப் பார்த்து மகிழ்கின்றனர்.
இந்த அருங்காட்சியகம் குறித்து கருத்து தெரிவித்த பார்வையாளர்கள், பாடப்புத்தகங்களில் மட்டுமே படித்த வரலாற்றை நேரில் காண்பது பெரும் பெருமையளிப்பதாகக் கூறினர். இது மாணவர்களுக்குக் கல்வி ரீதியாகப் பெரும் உதவியாக இருக்கும் என்றும், உலகத் தமிழர்கள் அனைவரும் வந்து பார்க்க வேண்டிய வரலாற்றுச் சின்னம் இது என்றும் அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பொதுமக்களின் வசதிக்காக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், சந்திப்பு பேருந்து நிலையம் மற்றும் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் ஆகிய முக்கியப் பகுதிகளில் இருந்து அருங்காட்சியகத்திற்குச் செல்ல சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.