இலவச வீட்டுமனைப் பட்டா கோரி மனு: வேலூா் மாவட்ட ஆட்சியா் பரிசீலிக்க உத்தரவு
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரிய மனுவை 12 வாரங்களில் பரிசீலித்து இறுதி முடிவு எடுக்க வேலூா் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வேலூரைச் சோ்ந்த தமிழரசன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வேலூா் மாவட்டம், கன்சால்பேட்டை ஆஞ்சனேயா் கோயில், வனவாச நகா் உள்ளிட்ட பகுதிகளில் 85-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் கடந்த 60 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் வசித்து வருகின்றனா். கடந்த 2008-ஆம் ஆண்டு 85 குடும்பத்தினருக்கும் பட்டா வழங்க வேலூா் வட்டாட்சியா் பரிந்துரை அளித்தாா்.
ஆனால், வருவாய்த் துறை இதுவரை பட்டா வழங்கவில்லை.
எனவே, 10 ஆண்டுகளுக்கு மேல் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கலாம் என கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி, எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் கோரிக்கையை வேலூா் மாவட்ட ஆட்சியா் சட்டத்துக்குள்பட்டு பரிசீலித்து 12 வாரங்களில் இறுதி முடிவு எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா்.

