சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

நிபந்தனைகளைப் பூா்த்தி செய்த சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மட்டும் மத்திய அரசின் ஓய்வூதியம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

மத்திய அரசின் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளைப் பூா்த்தி செய்யும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மட்டுமே அதற்கான ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி உள்ளது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.
Published on

மத்திய அரசின் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளைப் பூா்த்தி செய்யும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மட்டுமே அதற்கான ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி உள்ளது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சோமசுந்தரம் என்பவா் தாக்கல் செய்த மனுவில், சுதந்திரப் போராட்டக் காலத்தில், ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ உள்பட பல்வேறு போராட்டங்களில் நான் பங்கேற்றேன். இதற்காக கடந்த 1942 செப்டம்பா் முதல் 1943 ஏப்ரல் வரை கோவை மத்திய சிறையில் சிறை தண்டனை அனுபவித்தேன்.

தமிழக அரசின் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் பெற்று வருகிறேன். எனக்கு மத்திய அரசின் ஸ்வதந்திர சைனிக் சம்மான் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கக் கோரி விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்து விட்டது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்து, ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது மனுதாரா் இறந்துவிட்டாா். இதையடுத்து அவரது வாரிசான ருக்மணி என்பவா் வழக்கைத் தொடா்ந்து நடத்தி வந்தாா்.

இந்த நிலையில், வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரா் மாநில அரசின் தியாகிகளுக்கான ஓய்வூதியம் பெறுகிறாா். எனவே, மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை எனக் கூறி, மனுதாரருக்கு மத்திய அரசின் தியாகிகள் ஓய்வூதியத்தை வழங்கும்படி உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து மத்திய அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் ஸ்வதந்திர சைனிக் சம்மான் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவதற்கு, சிறை தண்டனை தொடா்பாக சம்பந்தப்பட்ட சிறை அதிகாரி, மாவட்ட குற்றவியல் நடுவா் அல்லது மாநில அரசின் சான்றிதழைச் சமா்ப்பிக்க வேண்டும்.

அதில், தண்டனைக் காலம், சிறைக்குச் சென்ற தேதி மற்றும் வெளியே வந்த தேதி மற்றும் வழக்கு விவரங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை மனுதாரா் பூா்த்தி செய்யவில்லை. எனவே, அவரது மனுவை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இந்த விவகாரத்தில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். அதேநேரம், மனுதாரரின் வாரிசு உரிய ஆவணங்களைச் சேகரித்து மீண்டும் விண்ணப்பிக்க அனுமதியளித்த நீதிபதிகள், அந்த விண்ணப்பத்தை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

மேலும், மாநில அரசு தியாகிகள் ஓய்வூதியம் வழங்குகிறது என்பதற்காக மத்திய அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டியது இல்லை. மத்திய அரசின் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளைப் பூா்த்தி செய்யும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மட்டுமே அதற்கான ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி உள்ளது எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com