

செவிலியா்கள் பணி நிரந்தரப் பிரச்னை குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வந்த ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
‘மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்காணும் செவிலியர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, ஒப்பந்த செவிலியர் சங்கங்களுடன் கடந்த 19, 24 ஆகிய நாள்களில் முதல்வர் அறிவுறுத்தல்களின்படி அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வரின் கவனத்துக்கு செவிலியர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் எடுத்துச் சென்று, முதல்வரின் ஆலோசனையின்பேரில் மீண்டும் இன்று (டிச. 24) ஒப்பந்த செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் அடிப்படையில், தற்போது ஒப்பந்த செவிலியர்களாக பணிபுரிந்து வரும் செவிலியர்களை நிரந்தர பணியிடத்தில் பணி நியமனம் செய்யும்பொருட்டு, நிலுவையிலுள்ள பதவி உயர்வுகள் மற்றும் புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, சுமார் 1000க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் விரைவில் நிரந்தர பணியிடங்களில் பணிநியமனம் செய்யப்படுவார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.