

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி இதுவரை 1,68,825 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) கடந்த நவ.4-ஆம் தேதி தொடங்கப்பட்டது. கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
அவர்களில் முகவரி மாறிய, இடம்பெயர்ந்த வாக்காளர்கள், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களைச் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கடந்த 19-ஆம் தேதி முதல் ஜன. 18 வரை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி கடந்த டிச.19 முதல் புதன்கிழமை (டிச.25) வரை 1,68,825 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இடம்பெயர்ந்தவர்களாக 66,44,881 பேர் நீக்கப்பட்டபோதிலும் பெயர்களைச் சேர்க்க கடந்த 6 நாள்களில் 1,68,825 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
வரைவு வாக்காளா் பட்டியலில் உள்ள பெயருக்கு ஆட்சேபம் தெரிவிக்கவோ அல்லது நீக்கவோ கோரும் படிவம்-7-க்கு இதுவரை 1,211 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என தலைமைத் தோ்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிறப்பு முகாம்கள்
வார இறுதி நாள்களில் பெயர்களைச் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
தகுதியுள்ள வாக்காளர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் டிச. 27, 28 மற்றும் ஜன. 3, 4 தேதிகளில் (சனி, ஞாயிறு) சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.