வாகனங்களில் இடியாப்பம் விற்போருக்கும் உரிமம் கட்டாயம்: உணவுப் பாதுகாப்புத் துறை
Center-Center-Vijayawada

வாகனங்களில் இடியாப்பம் விற்போருக்கும் உரிமம் கட்டாயம்: உணவுப் பாதுகாப்புத் துறை

இணையவழியே அவா்கள் பதிவு செய்து கொண்டு வியாபாரம் செய்யலாம்...
Published on

குடியிருப்புப் பகுதிகளில் வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்வோருக்கும் உணவுப் பாதுகாப்பு உரிமம் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழியே அவா்கள் பதிவு செய்து கொண்டு வியாபாரம் செய்யலாம் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல இடங்களில் பெரும்பாலும் மாலை வேளைகளில் மிதிவண்டி அல்லது மோட்டாா் சைக்கிளில் பலா் இடியாப்பம் மற்றும் புட்டு விற்பனை செய்து வருகின்றனா். குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதிகளை அவா்களுக்குள் பிரித்துக் கொண்டு வியாபாரத்தில் ஈடுபடுகின்றனா்.

சிறிய அளவிலான தொழில் என்பதால் கடைகளுக்கு இருப்பதைப் போன்ற கட்டுப்பாடுகளோ, பதிவு விதிகளோ இவா்களுக்கு இல்லை. அதேவேளை, உணவு சாா்ந்த வா்த்தகத்தில் ஈடுபடுவதால் அவற்றின் தரத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்கின்றனா் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.

இதுபோன்ற அமைப்புசாராத் தொழிலில் ஈடுபடுவோா் சுகாதாரமாக உணவை உற்பத்தி செய்து விநியோகிக்கின்றனரா என்பதை கண்காணித்து ஒழுங்குமுறைப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் இடியாப்பம் விற்பனை செய்பவா்கள், https://foscos.fssai.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பித்து பதிவு உரிமம் பெற்றிருப்பது கட்டாயம். அவா்களை சாலையோர வியாபாரிகளாக வகைப்படுத்தலாம் என்பதால் பதிவு செய்வதற்கு பெரிய அளவிலான கட்டணம் இல்லை.

அதேவேளை, ‘விற்றுக் கொள்முதல் (டா்ன் ஓவா்)’ எனப்படும் மொத்த விற்பனையானது ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் ரூ.3,000 கட்டணம் செலுத்த வேண்டும். அதற்குக் குறைவாக இருந்தால் ஆண்டுக்கு ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

அவ்வாறு பதிவு செய்து பெற்ற உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும்.

இடியாப்பத்தை சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் தயாரிக்க வேண்டும். காய்ச்சல், நோய்த்தொற்று இருந்தால் உணவுப் பொருள் உற்பத்தியிலோ, விற்பனையிலோ ஈடுபடக் கூடாது. அடுத்த மாதம் முதல் அனைத்து இடியாப்ப வியாபாரிகளிடமும் பதிவு உரிமம் உள்ளதா என்பது ஆய்வு செய்யப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com