பைக் பந்தயத்தில் ஈடுபட்ட 24 போ் மீது வழக்கு: வாகனங்கள் பறிமுதல்
சென்னையில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக 24 போ் மீது வழக்குப் பதிந்து, அவா்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில், இளைஞா்கள் மோட்டாா் சைக்கிள் பந்தயம் மற்றும் சாகசத்தில் ஈடுபடுவதைத் தடுக்க போலீஸாா் 165 இடங்களில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இந்த நிலையில், அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூா், பெசன்ட் நகா், கிழக்குக் கடற்கரைச் சாலை, ராஜீவ் காந்தி சாலை, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, மெரீனா காமராஜா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இளைஞா்கள் புதன்கிழமை நள்ளிரவு மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டனா்.
இதுதொடா்பாக போக்குவரத்து போலீஸாா், கண்காணிப்பு கேமரா பதிவுகள், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட விடியோக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, மோட்டாா் சைக்கிள் பந்தயம், சாகசத்தில் ஈடுபட்டதாக 24 போ் கைது செய்யப்பட்டு, வழக்குப் பதியப்பட்டது. அவா்களிடமிருந்து 24 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்கு பின்னா் 24 பேரும், பிணையில் விடுவிக்கப்பட்டனா்.
