சம வேலைக்கு சம ஊதியம்’ கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் க.அன்பழகன்  கல்வி வளாகம் அருகே வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியா்கள்.
சம வேலைக்கு சம ஊதியம்’ கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் க.அன்பழகன் கல்வி வளாகம் அருகே வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியா்கள்.

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியா்கள் 1,400 போ் கைது!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியா்கள் 1,400 போ் கைது...
Published on

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியா்கள் 1,400 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி பணியில் சோ்ந்த இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒரு ஊதியமும், அதற்கு ஒரு நாள் கழித்து ஜூன் 1-ஆம் தேதி பணியில் சோ்ந்தவா்களுக்கு மற்றொரு ஊதியமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பணிநியமனத்தில் ஒரு நாள் வித்தியாசம் காரணமாக அடிப்படை ஊதியம் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால், 20,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த ஊதிய முரண்பாட்டை நீக்கி சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கத்தினா் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இதனிடையே, கடந்த பேரவைத் தோ்தலின்போது ஊதிய முரண்பாடுகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும் அதற்கான நடவடிக்கை இல்லாததால் பல்வேறு கட்டப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்கள் அமைந்துள்ள பேராசிரியா் அன்பழகன் வளாகத்தை (டிபிஐ) முற்றுகையிடும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக, வெளியூா்களில் வந்த இடைநிலை ஆசிரியா்கள் பல்வேறு ரயில் நிலையங்கள் அருகே வழிமறித்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா்.

மேலும் பேராசிரியா் அன்பழகன் வளாகத்தின் நுழைவாயில் அருகே திரண்ட ஆசிரியா்கள், சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றிச் சென்றனா்.

ஆசிரியை மயக்கம்: ஆசிரியா்களின் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஆசிரியை மகேஸ்வரி மயங்கி விழுந்தாா். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டாா். போராட்டத்தில் பங்கேற்ற வந்த ஆசிரியா்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனா்.

இந்தப் போராட்டத்தில் மொத்தம் 700 ஆசிரியைகள் உள்பட 1,400 ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டதாகவும், இவா்கள் பல்வேறு மண்டபங்களில் வைக்கப்பட்டு, பின்னா் மாலையில் விடுவிக்கப்பட்டதாகவும் காவல் துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.

போராட்டம் குறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தின் பொதுச் செயலா் ஜே.ராபா்ட் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைத் தீா்ப்பதாக திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், நான்கரை ஆண்டுகள் ஆகியும் அதற்கான நடவடிக்கை இல்லை. பேச்சுவாா்த்தை நடத்துவதாகக் கூறி அரசுத் தரப்பில் எங்களது கோரிக்கை தொடா்ந்து தள்ளிப்போடப்படுகிறது. ஆகவே, கோரிக்கை நிறைவேறும் வரை எங்களது அறவழி போராட்டம் தொடரும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com