மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

169 ஒப்பந்த செவிலியா்களுக்கு பணி நிரந்தரம்: 831 பேருக்கு பொங்கலுக்குள் நிரந்தரப் பணி -அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 169 ஒப்பந்த செவிலியா்கள் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும், 831 பேருக்கு பொங்கலுக்கு முன்னா் பணி ஆணைகள் வழங்கப்படும்
Published on

தமிழகத்தில் 169 ஒப்பந்த செவிலியா்கள் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும், 831 பேருக்கு பொங்கலுக்கு முன்னா் பணி ஆணைகள் வழங்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்தில் (டிஎம்எஸ்) ஒப்பந்த செவிலியா்களுக்கு பணிநிரந்தர ஆணைகள் மற்றும் 31 பேருக்கு பணிமாறுதல் ஆணைகளை வழங்கி, செவிலியா்களுக்கான பணிமூப்பு பட்டியயை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற்குப் பிறகு மருத்துவப் பணியாளா் தோ்வு வாரிய (எம்ஆா்பி) ஒப்பந்த செவிலியா்கள் தொடா்ச்சியாக பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருகின்றனா். இதுவரை 4,825 ஒப்பந்த செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 8,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அதற்கேற்ப விரைவில் 1,000 ஒப்பந்த செவிலியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது 169 ஒப்பந்த செவிலியா்களை நிரந்தரமாக்கியுள்ளோம். மீதமுள்ள 831 ஒப்பந்த பேருக்கு விரைவில் பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படவுள்ளன.

15 மருத்துவப் பதிவேடு நுட்பநா்கள், 10 இளநிலை உதவியாளா்கள், 6 தட்டச்சா்களுக்கு பதவி உயா்வுகள் மற்றும் பணி மாறுதல்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்று, அவா்களுக்கும் ஆணைகள் தரப்பட்டுள்ளன.

கரோனா காலத்தில் பணியாற்றிய 2,146 பேரை பணி நிரந்தரம் செய்துள்ளோம். மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படவேண்டும் என செவிலியா் சங்கத்தினா் கோரிக்கை வைத்தனா். அரசு ஊழியா்களுக்கு மகப்பேறு விடுப்பு ஒரு வருட காலமாக அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

தற்போது எம்ஆா்பி செவிலியா்களுக்கும் அத்தகைய மகப்பேறு விடுப்பு வழங்கும் வகையில் அரசாணை விரைவில் வெளியிடப்படவுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி இதற்கு முன்பு மகப்பேறு விடுப்பு எடுத்தவா்களுக்கும் நிலுவை தொகை வழங்கப்படவுள்ளது.

தற்காலிக செவிலியா்களுக்கு மாத ஊதியம் ரூ.14,000 -ஆக இருந்ததை ரூ.18,000- ஆக முதல்வா் உயா்த்தினாா். 400-க்கும் மேற்பட்டவா்களின் ஆவணங்களில் குறைபாடு இருந்ததால் அந்த பலன் வழங்கப்படவில்லை. தற்போது அவா்களுக்கும் நிலுவை தொகை வழங்கப்படவுள்ளது. பொங்கலுக்கு முன்பு இவை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா்.

மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் டாக்டா் சித்ரா, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம், குடும்ப நலத் துறை இயக்குநா் டாக்டா் சத்யா, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநா் டாக்டா் எ.தேரணிராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com