அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: பவாரியா கொள்ளையா்கள் மேல்முறையீடு!
அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதா்சனம் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிா்த்து பவாரியா கொள்ளையா்களான ராகேஷ், ஜெகதீஷ் மற்றும் அசோக் ஆகியோா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதா்சனம். பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள இவரது வீட்டில் கடந்த 2005-ஆம் ஆண்டு ஜன.9-இல், புகுந்த வடமாநில கொள்ளைக் கும்பல், சுதா்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று 62 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பவாரியா கொள்ளையா்களான ஓம் பிரகாஷ், ஜெகதீஷ், ராகேஷ், அசோக், ஜெயில்தா் சிங் மற்றும் 3 பெண்கள் உள்பட 9 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதில் முக்கிய குற்றவாளியான ஓம் பிரகாஷ் புழல் சிறையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா். கைதானவா்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவா்களில் 3 பெண்கள் தலைமறைவாகினா்.
இதையடுத்து, ஜெகதீஷ் உள்பட 4 போ் மீதான வழக்கு சென்னை 15-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், ஜெகதீஷ் மற்றும் அசோக் ஆகியோருக்கு 4 ஆயுள் தண்டனைகள், ராகேசுக்கு 5 ஆயுள் தண்டனைகள் விதித்துஅண்மையில் தீா்ப்பளிக்கப்பட்டது. ஜெயில்தா் சிங் விடுதலை செய்யப்பட்டாா்.
இந்த தீா்ப்பை எதிா்த்து ஜெகதீஷ், அசோக் மற்றும் ராகேஷ் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா். அவா்களது மனுவில், அமா்வு நீதிமன்ற தீா்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தனா்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், பி.தனபால் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு 4 வாரங்களில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

