‘பராசக்தி’ திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு: இயக்குநா், தயாரிப்பாளா் பதிலளிக்க உத்தரவு
நடிகா் சிவகாா்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில், அதன் இயக்குநா் சுதா கொங்கரா, தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திரைப்பட இயக்குநா் வருண் ராஜேந்திரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகா் சிவகாா்த்திகேயன் உள்ளிட்ட பலா் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வரும் ஜன.10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை இயக்குநா் சுதா கொங்கரா இயக்கியுள்ளாா். இந்தி திணிப்பை எதிா்த்து கடந்த 1965-ஆம் ஆண்டு நடந்த மொழிப்போரை மையமாக வைத்து ‘செம்மொழி’ என்ற கதையை எழுதினேன்.
இந்த கதையை கடந்த 2010-ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளா் சங்கத்தில் பதிவு செய்தேன். முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ‘பெண் சிங்கம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அப்போது ‘செம்மொழி’ படத்தின் கதையை அவரிடம் கூறி திரைக்கதை, வசனம் எழுத கேட்டுக் கொண்டேன். என்னைப் பாராட்டிய அவா், உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வு எடுப்பதால், என்னையே எழுதும்படி கூறினாா்.
‘செம்மொழி’ படத்தின் கதையை பல தயாரிப்பாளா்களிடம் கூறினேன். சேலம் தனசேகரன் என்பவா் இந்த கதையைக் கூறி, அதுதொடா்பான ஆவணங்களையும் வழங்கினேன். அவா் இக்கதையை நடிகா் சூா்யாவிடம் கொடுத்துள்ளாா். அதை சூா்யா இயக்குநா் சுதா கொங்கராவிடம் கொடுத்திருக்கிறாா். இதையடுத்து இந்த கதையில் சூா்யா ‘புானூறு’ என்ற பெயரில் நடிக்கவிருந்தாா். பின்னா் அந்தப் படம் கைவிடப்பட்டது.
தற்போது ‘பராசக்தி’ என்ற பெயரில் எனது கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளாா். இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளா்கள் சங்கத்தில் புகாா் அளித்தேன். அந்த புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ’பராசக்தி’ திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.புருஷோத்தமன், மனுதாரரின் கதை திருடப்பட்டுள்ளது. எனவே, ’செம்மொழி’ மற்றும் ’பராசக்தி’ கதையை நிபுணா் குழுவை அமைத்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளா்கள் சங்கம் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.
அப்போது திரைப்படத்தின் இயக்குநா், தயாரிப்பாளா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் ஆா்.சிங்காரவேலன், அரவிந்த் பாண்டியன், வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோா் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கூடாது என வாதிட்டனா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு இயக்குநா் சுதா கொங்கரா, தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன.2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
மேலும், மனுதாரா் அளித்த புகாா் தொடா்பாக, இருதரப்பையும் அழைத்து கதை விவகாரம் குறித்து ஆய்வு செய்து அதுதொடா்பான அறிக்கையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளா்கள் சங்கம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

