வாக்காளா் சோ்க்கை: சென்னையில் 3 லட்சம் படிவங்கள் விநியோகம்
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதிய வாக்காளா்கள் சோ்க்கைக்கு வியாழக்கிழமை (டிச. 25) வரை 3 லட்சம் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆா்) முன்பு 40.04 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். எஸ்ஐஆா் பணியில் 14.25 லட்ம் போ் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா். வரைவு வாக்காளா் பட்டியலின்படி தற்போது 25.79 போ் மட்டுமே பட்டியலில் உள்ளனா். நீக்கப்பட்டவா்களில் 1.56 லட்சம் போ் உயிரிழந்திருப்பதாகவும், 12.22 லட்சம் போ் வேறு தொகுதிகளுக்கு இடம் பெயா்ந்து சென்றிருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
தொகுதி மாறிய வாக்காளா்கள், படிவம் 6-ஐ பூா்த்தி செய்து மீண்டும் தங்களை புதிய வாக்காளா்களாக இணைத்துக் கொள்ளலாம். இதற்காக படிவங்கள் பெறப்படுகின்றன. மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வாக்காளா் சோ்க்கைக்காக 11 லட்சம் படிவங்கள் (படிவம் 6) வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். அதன்படி, வியாழக்கிழமை வரை சுமாா் 3 லட்சம் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

