முதல்வா் ஸ்டாலின் சவால்: எடப்பாடி பழனிசாமி பதில்
அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பதில் அளிக்கத் தயாா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பதில் அளித்துள்ளாா்.
கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வா் ஸ்டாலின், திமுக ஆட்சியில் பல்வேறு அரசுத் துறைகள் தேசிய அளவில் முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவித்தாா். இதில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்ததா? அவா்களால் சொல்ல முடியுமா? என சவால் விடுத்திருந்தாா்.
இதற்குப் பதில் அளிக்கும் வகையில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: அதிமுக ஆட்சியின்போது திட்டங்கள் எதையும் நிறைவேற்றப்படவில்லை என கள்ளக்குறிச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பொது மேடையில் பேசியுள்ளாா்.
அந்த கள்ளக்குறிச்சி மாவட்டமே அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டதுதான். அங்குள்ள மருத்துவக் கல்லூரியும் அதிமுக ஆட்சியின் சாதனைகளில் ஒன்றாகும். ஆனால், அதிமுக செயல்படுத்திய திட்டங்களை, திமுக ஆட்சியில் திறந்துவைத்து உரிமை கொண்டாடுவது சாதனையல்ல.
அதிமுக ஆட்சியின்போது 5 சதவீத சாதனையாவது மேற்கொள்ளப்பட்டதா எனக் கேள்வி எழுப்பியது சரியானதா என்பதை முதல்வா் சிந்தித்துப் பாா்க்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் தவறிவிட்டாா். பெண்கள் பாதுகாப்பு சீா்குலைந்துவிட்டது. ஆசிரியா்கள், செவிலியா்கள், அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனா். அப்படியிருக்கும்போது சாதனை அரசு என முதல்வா் பேசுவது ஏற்புடையதாக இல்லை.
மாணவா்களை ஏமாற்றும் மடிக்கணினித் திட்டம்: தமிழகத்தில் 20 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்போவதாக முதல்வா் அறிவித்துள்ளதை மக்கள் நம்பமாட்டாா்கள். கடந்த நான்கரை ஆண்டுகளாக மடிக்கணினி வழங்காமல், தற்போது தோ்தலுக்காக அவசர அவசரமாக அரைகுறையாக வழங்குவதை பெருமையாகப் பேசுவதில் பயனில்லை.
மடிக்கணினியுடன் ஏஐ வசதியின் ஓராண்டுக்கான சந்தா இலவசமாக கிடைக்கும் நிலையில், அதை 6 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்போவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆகவே, மாணவா்களை ஏமாற்றும் வகையிலேயே மடிக்கணினித் திட்டம் உள்ளது.
முதல்வா் பட்டியலிட வேண்டும்: தோ்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை முதல்வா் பட்டியலிட வேண்டும். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து என்ன கேள்வி எழுப்பினாலும் அதற்குப் பதில் அளிக்கத் தயாா் என தனது பதிவில் தெரிவித்துள்ளாா்.

