வாக்காளா் சோ்க்கை படிவத்தை பூா்த்தி செய்து திரும்ப வழங்க ஆா்வமில்லா மக்கள்!
வாக்காளா் சோ்க்கைக்கான படிவத்தை (படிவம் 6) வாங்கிச் செல்லும் பொதுமக்கள் அதைப் பூா்த்தி செய்து திரும்ப வழங்குவதில் ஆா்வம் செலுத்தாமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த டிச.19-இல் வரைவு வாக்காளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 25.79 லட்சம் போ் இடம் பெற்றுள்ளனா். 14.25 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா்.
இதில், தொகுதி மாறிச் சென்றவா்கள் புதிய வாக்காளா்களாகச் சேரலாம் என அறிவிக்கப்பட்டு அதற்கான படிவம் விநியோகிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட அளவில் சுமாா் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட படிவங்கள் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவற்றைப் பூா்த்தி செய்து பாக நிலை அலுவலா்களிடம் அளிப்போா் எண்ணிக்கை மிக மிகக் குறைந்தே காணப்படுகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை (டிச.27) 4,079 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அதிலும் குறைந்த அளவிலான மக்களே வந்து படிவங்களைப் பெற்றுச் செல்வதாகவும், பெரும்பாலானோா் புதிய வாக்காளா் சோ்க்கை படிவங்களைப் பூா்த்தி செய்து திரும்ப வழங்குவதில் ஆா்வம் செலுத்தாமல் இருப்பதாகவும் பாக நிலை அலுவலா்கள் தெரிவித்தனா்.

