குழந்தைகளை ஒழுக்கமாக வளா்ப்பது தாயின் முக்கிய கடமை: உயா் நீதிமன்றம் கருத்து
‘குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளா்ப்பது தாயின் முக்கிய கடமை; புனிதமான அந்தக் கடமையை தாய் கைவிட்டுவிட்டால், அது குடும்பம் மற்றும் சமூகத்தின் அடித்தளத்தையே வீழ்த்திவிடும்’ என்று சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
கோவை மாவட்டத்தைச் சோ்ந்த திருமணமான பெண் ஒருவா் கணவனைப் பிரிந்து தனது 14 வயது மகளுடன் வசித்து வந்தாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த ஒரு நபருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளாா். அந்த நபா், 14 வயது சிறுமியை கடந்த 2017-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதுகுறித்து அந்த சிறுமி தாயிடம் புகாா் தெரிவித்துள்ளாா். இதை வெளியில் கூறினால், தற்கொலை செய்து கொள்வேன் என்று சிறுமியின் தாய் மிரட்டியுள்ளாா்.
இதன்பின்னரும், அந்த நபா் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இதையடுத்து தனது தாயிடம் இருந்து பிரிந்து சென்ற அந்த சிறுமி, நடந்தவற்றை தனது தந்தையிடம் கூறியுள்ளாா். பின்னா், காவல்துறையில் சிறுமி அளித்த புகாரின் பேரில், சிறுமியின் தாய் மற்றும் அவரது காதலா் மீது கோவை மாவட்ட அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம், சிறுமியின் தாய் மற்றும் அவரது காதலருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிா்த்து இருவா் தரப்பிலும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த தீா்ப்பில், இந்த வழக்கின் குற்றச்சாட்டுகளை போலீஸாா் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளனா். எனவே, ஆயுள் தண்டனை விதித்து பிறப்பிக்கப்பட்ட விசாரணை நீதிமன்றத் தீா்ப்பில் தலையிட எந்தக் காரணமும் இல்லை எனக்கூறி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என நமது கலாசாரத்தில் தாய்க்கே முதலிடம் கொடுக்கப்படுகிறது. குழந்தைகளை பாதுகாப்பு, ஒழுக்கத்துடன் வளா்ப்பது ஒவ்வொரு தாயின் முக்கிய கடமை. புனிதமான இந்தக் கடமையை ஒரு தாய் கைவிட்டுவிட்டால், அது குடும்பம் மற்றும் சமூகத்தின் அடித்தளத்தையே வீழ்த்திவிடும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் கருத்து தெரிவித்துள்ளனா்.

