திட்டமிட்டபடி ஜன.6 முதல் வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
திட்டமிட்டபடி வருகிற ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ ஜியோ) தெரிவித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சாா்பில் தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடா்ந்து, ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த 22-ஆம் தேதி அமைச்சா்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோருடன் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் சங்கங்களின் நிா்வாகிகள் நடத்திய பேச்சுவாா்த்தை முடிவு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் தெரிவித்தனா்.
இதையொட்டி, வேலைநிறுத்த ஆயத்த மாநாடு அனைத்து மாவட்டங்களிலும் சனிக்கிழமை நடைபெற்றது. சென்னையில் சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ சாா்பில் ஆயத்த மாநாடு நடைபெற்றது.
இந்த நிலையில், திட்டமிட்டபடி ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும், இதில் தமிழகம் முழுவதும் 6 லட்சம் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்பாா்கள் என்றும் ஜாக்டோ-ஜியோ நிா்வாகிகள் தெரிவித்தனா்.

