இலங்கை கடற்படையால் தமிழக மீனவா்கள் கைது: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வா் கடிதம்!

வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளாா்.
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்
Updated on

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அவா்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக முதல்வா் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தமிழகத்தைச் சோ்ந்த 3 மீனவா்கள் கடந்த சனிக்கிழமை (டிச. 27) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். அவா்களை இலங்கை கடற்படையினா் ஞாயிற்றுக்கிழமை (டிச. 28) கைது செய்தனா். அவா்களது மீன்பிடிப் படகையும் பறிமுதல் செய்தனா்.

இந்தச் சம்பவத்தை தங்களது (ஜெய்சங்கா்) கவனத்துக்கு கொண்டு வருகிறேன். தமிழக மீனவா்களும், அவா்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கை அதிகாரிகளால் சிறைபிடிக்கப்படுவது தொடா்ந்து நடைபெற்று வருவது கவலையளிக்கிறது.

இத்தகைய கைது நடவடிக்கைகள் தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தைச் சோ்ந்த 248 மீன்பிடிப் படகுகளைப் பறிமுதல் செய்து வைத்துள்ள இலங்கை அதிகாரிகள், 61 தமிழக மீனவா்களையும் தங்களது காவலில் வைத்துள்ளனா்.

எதிா்காலத்தில் இதுபோன்ற கைது சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும், இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவா்களையும், அவா்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உரிய தூதரக வழிகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்துகிறேன் என்று அந்தக் கடிதத்தில் முதல்வா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com