

கூட்டணி குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திருச்சியில் அளித்த பேட்டியில், இந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றி தருகின்ற கூட்டணியை அமைப்போம். எங்கள் தொண்டர்களின் மன நிலையை நிர்வாகிகள் மூலம் அறிந்து முடிவெடுப்போம். தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையனை 1987-ல் இருந்து தெரியும். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தவர் செங்கோட்டையன். பல ஏற்றத்தாழ்வைச் சந்தித்தவர். அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் வெற்றி சாத்தியம் என்பது என்னுடைய கருத்து. இதை கூறுவதால் எனக்கு மன மாற்றம் ஏற்பட்டு விட்டதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
யாரும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அழுத்தம் கொடுத்து ஒரு முடிவை எடுக்க வைத்தால் தலைவரை வேண்டுமானாலும் வழிக்கு கொண்டு வரலாம். தொண்டர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அன்போடும் மரியாதையோடும் அணுகி தான் கூட்டணிக்கு கொண்டு வர எந்த கட்சியாக இருந்தாலும் செயல்படுவார்கள். பியூஷ் கோயல் வந்த போது தொகுதிப் பங்கீடு செய்யப்பட்டதாக வந்த தகவல் வதந்திதான் என ஏற்கனவே கூறி விட்டேன். கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகளும், கூட்டணியை உருவாக்க விரும்பும் கட்சிகளும் எங்களை அணுகி பேசி வருவது உண்மை.
ஆனால் நாங்கள் கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. நாட்டு நடப்பை பார்த்து வருகிறோம். வலுவாக இருப்பதாக கூறப்படும் திமுக கூட்டணி நிலை என்ன என்பது குறித்தும் பார்த்து வருகிறோம். அவர்களின் நிலை, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை பார்த்து விட்டு முடிவெடுப்போம். அதுவரை எங்களுக்கு கால அவகாசம் உள்ளது. கூட்டணி குறித்து அவசரப்படுத்துவதால் எந்த பதிலும் கூற முடியாது. கிறிஸ்துவர்கள் மீது எங்கோ ஓர் இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதை இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுவது தவறு.
எந்த மதத்தினர் மீதும் யார் தாக்குதல் நடத்தினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றி இருக்கக் கூடாது. அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியது வரவேற்கத்தக்கது. கடுமையான நிதி நெருக்கடியில் மாநில அரசுகள் இருக்கும் நிலையில் அந்தத் திட்டத்திற்கு 40% மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும் என்கிற முடிவையும் மத்திய அரசு மாற்ற வேண்டும். 125 நாட்கள் முழுமையாக வேலை அரசின் பணம் சரியாக செலவிடப்படும்.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர்க்கு தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்றாமல் இந்த அரசு செயல்படுவது மக்களின் நம்பிக்கையை இழந்து வருவதைதான் காட்டுகிறது. நிச்சயமாக இது தேர்தலில் பிரதிபலிக்கும். அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என எழுதுவதில் எந்த தவறும் இல்லை, அதை எழுத கூறுவதில் எந்த தவறும் இல்லை. அதிமுகவில் சசிகலா மீண்டும் இணைவது போல் வரும் தகவலுக்கு நான் பதில் கூற முடியாது. அப்படி அதில் உண்மை இருந்தால் அவர் என்னிடம் நிச்சயம் கூறுவார்.
உங்கள் பார்வை திமுகவின் பக்கம் சாயுமா என்கிற கேள்விக்கு, எங்கள் பார்வை யார் பக்கம் சாய்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.