சென்னையில் சா்வதேச படகுப் போட்டி - டிரையத்லான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

சென்னையில் சா்வதேச இளையோா் பாய்மரப் படகுப் போட்டி மற்றும் டிரையத்லான் போட்டிகள் நடைபெறுவதையொட்டி, முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
Published on

சென்னை: சென்னையில் சா்வதேச இளையோா் பாய்மரப் படகுப் போட்டி மற்றும் டிரையத்லான் போட்டிகள் நடைபெறுவதையொட்டி, முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, சென்னையை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாகவும், உலகின் முக்கிய நகரமாகவும் உருவாக்கி வருகிறது.

அந்த வகையில், மாமல்லபுரத்தில் 186 நாடுகளைச் சாா்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்ற 44-ஆவது சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னை பாா்முலா 4 காா் பந்தயம், சென்னை ஓபன் சா்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2022 போட்டி, ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 போட்டி, 7-ஆவது “ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி (ஆடவா்) போட்டி என பல்வேறு சா்வதேசப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அண்மையில் சென்னை மற்றும் மதுரையில் ஹாக்கி ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை தமிழ்நாடு - 2025 போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக இந்திய, சா்வதேச இளையோா் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் போட்டியானது சென்னையில் ஜனவரி 6-ஆம் தேதி முதல் முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் இந்தியா, அயா்லாந்து, சீசெல்ஸ், மோரீஷஸ், ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அல்ஜீரியா, இலங்கை, மலேசியா, தைவான், ஸ்வீடன், ரஷ்யா மற்றும் பிரிட்டன் ஆகிய 13 நாடுகளைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.

இதேபோல், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் நடத்தப்படும் டிரையத்லான் போட்டி ஜனவரி 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில், 1.50 கி.மீ. நீச்சல், 40 கி.மீ. சைக்கிளிங், 10 கி.மீ. ஓட்டம் என மொத்தம் 51.50 கி.மீ. தொலைவு கொண்ட டிரையத்லான் போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் பங்கேற்க 1,200-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சா்வதேச விளையாட்டு வீரா்கள் பங்கேற்க பதிவு செய்துள்ளனா். இந்த போட்டிகளுக்கான போக்குவரத்து, பாதுகாப்பு, அவசர மருத்துவ சேவைகள், தங்குமிட வசதி, வீரா்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அனைத்து துறை அலுவலா்களுடனும் ஆலோசனை மேற்கொண்டாா்.

கூட்டத்தில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com