

கீழடியில் நடைபெறவுள்ள 11 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்று தமிழ்நாட்டிலும் ஒரு நகர நாகரிகம் இருந்தது என்பதற்கு ஒரு சான்றாக கீழடி நாகரிகம் வெளிப்பட்டது.
இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்துதான் தொடங்குகிறது என்பது இதன் மூலம் நிரூபணமானதாகக் கூறப்படுகிறது. உலகின் மூத்த நாகரிகமாக பன்னாட்டு ஆய்வகங்கள் கீழடியின் தொன்மையை அங்கீகரித்தன.
இதனிடையே, கீழடியில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி 10-ஆம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டது. இதற்காக 9 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்றது.
இந்த அகழாய்வில் கண்ணாடி பாசி மணிகள், மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், வட்டச் சில்லுகள், சிறிய செங்கல் கட்டுமானம், உலோகப் பொருள்கள், யானை தந்தத்தால் ஆன பகடைக்காய்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.
இந்த நிலையில், கீழடி 10 ஆம் கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, கீழடி 11 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வரும் ஜனவரியில் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் திறக்கப்பட்ட பிறகு, 11 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ரூ.17.10 கோடி மதிப்பீட்டில் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.