மின்சார பேருந்துகளுக்கான சாலை வரி விலக்கு நீட்டிப்பு: உரிமையாளா்கள் வரவேற்பு
மின்சார பேருந்துகளுக்கான சாலை வரி விலக்கு டிச. 31-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், வரிவிலக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்க தலைவா் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மின்சார பேருந்துகளுக்கு வழங்கப்பட்டு வந்த சாலை வரி விலக்கை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்க ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கையை பரிசீலித்த அரசு, மின்சார பேருந்துகளுக்கான சாலை வரி விலக்கை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசுக்கும், முதல்வா் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இது பசுமைப் போக்குவரத்தை ஊக்குவிப்பதாக அமைவதுடன், தனியாா் பொதுப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதாக அமையும்.
மேலும், மகாராஷ்டிரத்தில் மின்சார பேருந்துகளுக்கு, அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் முழுமையான சுங்கக் கட்டண விலக்கு வழங்குவதுபோல், தமிழக அரசும் மின்சார ஆம்னி பேருந்துகளுக்கு அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் முழுமையான சுங்கக் கட்டண விலக்கு வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் அவா்.

