நமது நிருபர்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கு விசாரணைக்காக தவெக பொதுச் செயலர் ஆனந்த், தேர்தல் தலைமைப் பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச் செயலர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலர் மதியழகன் ஆகியோர் தில்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை காலை ஆஜராகினர்.
கரூரில் தவெக தலைவர் விஜய் கடந்த செப்.27-ஆம் தேதி பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இது தொடர்பாக கரூரில் முகாமிட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விசாரிக்க தவெக நிர்வாகிகளுக்கு சிபிஐ அண்மையில் அழைப்பாணை அனுப்பியது. இதைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அவர்கள் திங்கள்கிழமை ஆஜராகினர்.
இந்த விசாரணைக்கு தவெக நிர்வாகிகள் மட்டுமல்லாமல், கரூர் மாவட்ட ஆட்சியர் எம். தங்கவேல், கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கய்யா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், டிஎஸ்பி வி. செல்வராஜ், கரூர் நகர காவல் ஆய்வாளர் ஜி. மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் ஆஜராகினர்.
இந்த விசாரணை செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது. தவெக தரப்பினருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அரசு தரப்பும், தவெக தரப்பும் தங்களுடைய வாதங்களுடன், ஆவணங்களும் கொடுத்ததாக தெரிகிறது.
சிபிஐ அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை சுமார் 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 6.30 மணிக்கு முடிவடைந்தது.
விசாரணை நிறைவடையாததால் தவெக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மீண்டும் புதன்கிழமை ஆஜராக வேண்டும் என்று கூறி அனைவரையும் சிபிஐ அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இந்த விசாரணை குறித்து செய்தியாளர்களிடம் கருத்துகளை தெரிவிக்க தவெக தரப்பினர் மறுத்துவிட்டனர்.
தவெக தலைவர் விஜய்யிடம் ஜனவரி மாதத்தில் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டிருப்பதாக தகவலறிந்த அதிகராபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.