

கரூர் பலி: கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில் விசாரணைக்காக தில்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை ஆஜராகியுள்ளனர்.
தில்லியில் நேற்று ஆஜரான தவெக பொதுச் செயலாளா் ஆனந்த், தோ்தல் தலைமை பொதுச் செயலாளா் ஆதவ் அா்ஜூனா, இணைப் பொதுச் செயலாளா் நிா்மல் குமாா், கரூா் மாவட்ட செயலாளா் மதியழகன் ஆகியோரிடம் 8 மணிநேரத்துக்கு மேலாக விசாரணை நீடித்தது.
கரூரில் த.வெ.க. தலைவா் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் பலியான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடா்பாக கரூரில் முகாமிட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வந்தனா்.
ஏற்கெனவே, கரூரில் வைத்து ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தற்போது தில்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
இதையடுத்து தவெக நிா்வாகிகள் திங்கள்கிழமை தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். இவர்கள் மட்டுமல்லாமல், கரூா் மாவட்ட ஆட்சியா் எம். தங்கவேல், கரூா் மாவட்ட கண்காணிப்பாளா் ஜோஷ் தங்கய்யா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், டிஎஸ்பி வி. செல்வராஜ், கரூா் நகர காவல் ஆய்வாளா் ஜி. மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் விசாரணைக்கு ஆஜராகினா்.
நேற்றைய விசாரணையில், பரப்புரை கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது ஏன்? அவா் வருவதில் தாமதம் இருந்தால் அதற்கான காரணம் என்ன? பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன செய்யப்பட்டன? கூட்ட அனுமதி எப்படி பெறப்பட்டது? கூட்டத்துக்கு எத்தனை போ் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்பட்டது? போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை தொடர்ந்து வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.