தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் டிச.31 முதல் ஜன.5 வரை ஆறு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
வடக்கு கேரளம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனிடையே தென்கிழக்கு வங்கக் கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், டிச.31 முதல் ஜன.5 வரை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், இரவு அல்லது அதிகாலை வேளைகளில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
உறைபனி எச்சரிக்கை: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளைகளில் புதன்கிழமை(டிச.31) உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு அல்லது அதிகாலை வேளைகளில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். மேலும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை 3 % குறைவு
நிகழாண்டு அக்டோபா் முதல் டிசம்பா் மாதம் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தின் சராசரி மழைப்பொழிவு 440 மி.மீ.- ஆக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (டிச.30) வரை 430 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது.
மேலும், சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 10 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. சென்னையில் சராசரியாக 807 மி.மீ. மழைப்பொழிவு எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் 725 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் நிகழாண்டு வடகிழக்கு பருவமழை 3 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

