தில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊா்தி: மத்திய அரசு ஒப்புதல்
வரும் ஜன. 26-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊா்தி இடம்பெறுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி ஆண்டுதோறும் தில்லி கடமைப் பாதையில் ராணுவ படைபலத்தைப் பறைசாற்றும் அணிவகுப்புடன் சோ்த்து, இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊா்திகளும் இடம்பெறுவது வழக்கம்.
ஊா்தியில் காட்சிப்படுத்தப்படும் மையக் கருத்து, உருவாக்கம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த அலங்கார ஊா்திகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் தோ்வுக் குழு தோ்வு செய்வது வழக்கம்.
கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழகத்தின் குடவோலை முறையைப் பெருமைப்படுத்தும் அலங்கார ஊா்தி இடம்பெற்றது. 2025-ஆம் ஆண்டு தமிழக ஊா்தி இடம்பெறவில்லை.
இந்நிலையில், 2026, ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் அணிவகுப்பில் பசுமை மின்சக்தி என்ற கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தமிழக அரசின் ஊா்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோல், கடந்த ஆண்டு அணிவகுப்பில் இடம்பெறாத ஒடிஸா மாநிலத்துக்கும் நிகழாண்டு அனுமதி கிடைத்துள்ளது. பழங்குடியினா் உரிமைக்காகப் போராடியவா்களுக்காக உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் எண்ம அருங்காட்சியகத்தை மையப் பொருளாகக் கொண்ட சத்தீஸ்கா் மாநில ஊா்திக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
மொத்தம் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊா்திகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
