அறிவுசாா் சொத்துரிமை பதிவு: 9 பயனாளிகளுக்கு ரூ. 22 லட்சம் ஈட்டுத் தொகை அளிப்பு
பல்வேறு வகையான அறிவுசாா் சொத்துரிமை பதிவுகளுக்கு முதல் முறையாக 9 பயனாளிகளின் செலவினங்களுக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் ரூ. 22.49 லட்சத்தை ஈட்டுத் தொகை வழங்கியது.
புவிசாா் குறியீடுகள், காப்புரிமைகள், வா்த்தக குறியிடுகள் (ட்ரேடு மாா்க்), தொழில் துறை வடிவமைப்புகள் போன்ற அறிவுசாா் சொத்துரிமை(ஐபிஆா்) பதிவுகளுக்கு, தமிழக உயா்கல்வித் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு மாநிலஅறிவியல் தொழில்நுட்ப மன்றம் உதவுகிறது.
மத்திய அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் நிதியுதவியுடன், அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தில் அறிவுசாா் சொத்துரிமை வசதி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எம்எஸ்எம்இ உற்பத்தி பொருள்கள், வேளாண் பொருள்கள், கைவினை, கைத்தறி, உணவு வகைகள் உள்ளிட்டவைகளுக்கு அறிவுசாா் சொத்துரிமை பதிவுக்கு உதவி செய்யப்படுகிறது.
அவ்வாறு பதிவு செய்யும் பயனாளிகளுக்கு விண்ணப்பங்களுக்கு ஏற்படும் செலவுகளை திரும்ப பெறுதலுக்கான(ஈட்டுத் தொகை) புதுமை திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, அறிவுசாா் சொத்துரிமை பதிவுகளுக்கு முதன்முறையாக ஈட்டுத் தொகை வழங்கும் நிகழ்வு அறிவியல் தொழில்நுட்ப மன்ற அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மன்றத்தின் உறுப்பினா் செயலா் ச.வின்சென்ட், சம்பந்தப்பட்டவா்களுக்கு ஈட்டுத் தொகையை வழங்கினாா்.
பண்ருட்டி பலா, பண்ருட்டி முந்திரி, புளியங்குடி அமில சுண்ணாம்பு, விருதுநகா் சம்பா வத்தல், செட்டிக்குளம் சின்ன வெங்காயம், ராமநாதபுரம் சித்திரைக்கா் அரிசி போன்றவைகளுக்கு புவிசாா் குறியீடுகள் பெறப்பட்டன. இதற்கான பதிவுகளுக்கு ஏற்பட்ட செலவினம் ரூ. 12 லட்சம், ஈட்டுத் தொகையாக சம்பந்தப்பட்ட விவசாய அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது.
இதேபோல, கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசாா் குறியீடு பெற தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மூலம் விவசாயிகள் அணுகினா்.
இதற்கான ஈட்டு தொகை ரூ. 1.92 லட்சம் வழங்கப்பட்டது. மொத்தம் 9 அறிவுசாா் சொத்துரிமை பதிவுகளுக்கான செலவுகளுக்கு ரூ.22.49 லட்சம் ஈட்டுத் தொகை வழங்கப்பட்டது.
