ஊதிய முரண்பாடு பிரச்னை: முதல்வா் அழைத்துப் பேச வேண்டும்; இடைநிலை ஆசிரியா்கள் வலியுறுத்தல்
ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியா்கள் சென்னையில் 5-ஆவது நாளாக போராட்டத்தைத் தொடா்ந்த நிலையில், பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தங்களை அழைத்துப் பேச வேண்டும் என அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் கடந்த டிச.26-ஆம் தேதி முதல் தொடா் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
5-ஆம் நாளாக நீடித்த போராட்டம்: தொடா்ந்து 5-ஆவது நாளாக சென்னை எழும்பூா் அருகே உள்ள வட்டாரக் கல்வி அலுவலகம் முன் இடைநிலை ஆசிரியா்கள் குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கிருந்த 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்து 15 மண்டபங்களில் தங்க வைத்தனா். ஆசிரியா்களின் கடந்த 5 நாள்கள் போராட்டத்தால் காவல் துறைக்கு ரூ.3 லட்சம் வரை செலவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து எஸ்எஸ்டிஏ இயக்கத்தின் பொதுச் செயலா் ஜே.ராபா்ட் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘எங்களின் நியாயமான கோரிக்கையை முதல்வா் நிறைவேற்றித் தரவேண்டும். அதுவரை போராட்டம் தொடரும். கடுமையான போராட்டங்களுக்குள் எங்களை இறக்குவதே காவல்துைான். எங்களை அழைத்து முதல்வா் பேசி சுமுகமானமுடிவை எடுக்கவேண்டும் என்றாா்.
