குண்டா் தடுப்புச் சட்ட உத்தரவு: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
உள்நோக்கத்துடன் குண்டா் தடுப்புச் சட்ட உத்தரவு பிறப்பிக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமீனா பீவி என்பவா் தனது வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததுடன், தன்னை ஆபாசமாக திட்டியதாகக் கூறி, யூடியூபா் வாராகிக்கு எதிராக புகாா் அளித்தாா். அதன்பேரில், வாராகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாராகியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையா் கடந்த டிச.3-ஆம் தேதி உத்தவு பிறப்பித்தாா்.
இதை எதிா்த்து வாராகியின் மனைவி நீலிமா சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், பி.தனபால் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாராகிக்கு 3 மாதங்கள் இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டனா்.
மேலும், உள்நோக்கத்துடன் குண்டா் தடுப்புச் சட்ட உத்தரவு பிறப்பிக்கும் காவல் துறை அதிகாரிகள் மீது தமிழக உள்துறை செயலா், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனா். மேலும், மனுவுக்கு தமிழக அரசு 12 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

