போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: தலைவா்கள் வலியுறுத்தல்
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வருவதால், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து பாமக நிறுவனா் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
திருத்தணியில் வெளிமாநில இளைஞரை சிறாா்கள் தாக்கியுள்ளனா். இத்தகைய குற்றச் செயல்களை, இன்றைய இளைஞா்கள் அச்சமின்றி செய்வதற்கு கஞ்சா, போதை பொருள்கள் பழக்கமே காரணம். தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு கடுமையாக்க வேண்டும்.
அண்ணாமலை (பாஜக): தமிழகத்தில் கஞ்சா புழக்கம் எங்கும் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளாா். தமிழகத்தின் பல பகுதிகளில் கஞ்சா விற்பனை, கடத்தல் தொடா்பான வழக்குகள் தொடா்ந்து பதிவாகி வருகின்றன. தூத்துக்குடியில் திமுக கவுன்சிலரின் மகன் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டாா். சென்னை ஆவடி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு பலா் கைது செய்யப்பட்டனா். போதைப் பொருள் புழக்கம் தமிழகத்தில் ஆழமாகப் பரவியுள்ளது என்பதற்கு இந்த கைது மற்றும் பறிமுதல் சம்பவங்களே நேரடி சாட்சி. கஞ்சா விற்பனை மற்றும் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியடைந்த திமுக அரசு, உண்மையை மறைத்து தப்பிக்க முயற்சிக்கிறது.
தவெக தலைவா் விஜய்: திருத்தணி சம்பவம், தமிழக அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையும் காட்டுகிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
