தென் மாநிலங்களில் கடந்தாண்டு 2,362 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

தென் மாநிலங்களில் 2025-ஆம் ஆண்டில் 2,362 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
Published on

தென் மாநிலங்களில் 2025-ஆம் ஆண்டில் 2,362 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்தப் பிரிவு சென்னை மண்டல இயக்குநா் அரவிந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சென்னை மண்டலத்தில் தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, அந்தமான் - நிகோபாா் தீவுகள் ஆகிய பகுதிகள் உள்ளன. மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், இந்த மாநிலங்களில் கடந்தாண்டு 2,344 கிலோ கஞ்சா, 7.618 கிலோ கோகைன் உள்பட 11.725 கிலோ சிந்தட்டிக் என்ற வேதி போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 64 கோடி ஆகும்.

போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக, 46 போ் கைது செய்யப்பட்டனா். போதைப்பொருள் கடத்தல் கும்பல் நிதி தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு, 6 பேரின் ரூ.12.33 கோடி அசையும், அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த 6 பேரில், ஒருவா் துபையில் இருந்து, ஹவாலா பண பரிமாற்ற கும்பல்களை இயக்கும் நபராக செயல்பட்டு வந்தாா். இந்த நபருக்கு சொந்தமான ரூ.2 கோடி சொத்துகள் முடக்கப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல் தொடா்பான 15 வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இவற்றில் 11 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. மொத்த வழக்குகளில் 73.33 சதவீத வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட 4,314 கிலோ போதைப் பொருள்கள் சட்ட ரீதியாக அனுமதி பெறப்பட்டு அழிக்கப்பட்டன.

8 போ் நாடு கடத்தல்: ஜனவரி மாதம் 7,185 கிலோ போதைப் பொருள்களை அழிக்க உள்ளோம். போதைப் பொருள் கடத்தல்காரா்கள் ‘டாா்க்நெட்’ என்ற இணையதள சேவையைப் பயன்படுத்தித்தான் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 4 டாா்க்நெட் இணையதளத்தை முடக்கியுள்ளோம்.

சா்வதேச காவல் துறை உதவியுடன் இலங்கை காவல் துறையுடன் இணைந்து சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமிழக காவல் துறை, சிறைத் துறை, தமிழக போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து, சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த 8 போ் அடையாளம் காணப்பட்டு, நாடு கடத்தப்பட்டுள்ளனா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com