

2026 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ரூ. 248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு சார்பில், பரிசுத் தொகை மற்றும் பரிசுத் தொகுப்பு குறித்த பேச்சுகள் ஆரம்பிக்கத் துவங்கியுள்ளன. இதற்கு மத்தியில் ஒரு குடும்பத்தில் ரேஷன் கார்டுக்கு ரூ. 3,000 முதல் ரூ. 5 ஆயிரம் வரை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 2.22 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படவுள்ள ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்காக ரூ. 248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பச்சரிசி, சர்க்கரை, வேட்டி மற்றும் சேலை உள்ளிட்ட பொருள்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகள் 85% வரை நிறைவு பெற்றுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெகு விரைவில் பொங்கல் பரிசுத் தொகை மற்றும் கரும்பு உள்ளிட்ட விவரங்கள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் ரொக்கப் பணத்தோடு 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தலா 22.291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டி, 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலை நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு 85 சதவீதம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் பரிசுத் தொகையாக தமிழக அரசு வழங்கியது. 2025 பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை மட்டுமே வழங்கியது தமிழக அரசு. விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால் 2026 பொங்கல் பண்டிகைக்கு ரூ.3,000 பரிசுத் தொகையை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது பச்சரிசி, சர்க்கரை, வேட்டி மற்றும் சேலை உள்ளிட்ட தகவல்கள் மட்டுமே தற்போது வெளியாகி உள்ள நிலையில், இந்த வார இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசுத் தொகையை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.
ஜனவரி 10 ஆம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பு மற்றும் பரிசுத் தொகையை தமிழ்நாடு முழுக்க விநியோகம் செய்து முடிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
எப்போதும் போலவே டோக்கன் முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை விநியோகிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. தாயுமானவர் திட்டத்தின் மூலம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வீடு தேடி வரம் உள்ளது.
ஜனவரி மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையையும் பொங்கல் பண்டிகைக்கு முன்னரே பயனாளிகளின் வஙகிக் கணக்கில் வரவு வைக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.