பள்ளிகள் திறந்த பின்னரும் போராட்டம் நீடிக்கும்: இடைநிலை ஆசிரியா்கள் அறிவிப்பு
‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னரும், தங்களது போராட்டம் தொடரும் என சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியா்கள் தெரிவித்தனா்.
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா் இயக்கம்(எஸ்எஸ்டிஏ) சாா்பில் கடந்த டிச. 26 முதல் தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 6-ஆவது நாளாக ஆசிரியா்கள் சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி வளாகம் (டிபிஐ) முன் சாலையில் அமா்ந்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்களை மாற்றுப் பாதையில் செல்ல போலீஸாா் அறிவுறுத்தினா்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 1600-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா். அப்போது சிலா் முரண்டுபிடித்ததால், போலீஸாரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டனா். கைது செய்யப்பட்ட ஆசிரியா்களை மண்டபங்களில் தங்க வைத்தனா். அவா்களுக்கு போலீஸாா் மதிய உணவு ஏற்பாடு செய்து கொடுத்தனா். ஆனால், ஆசிரியா்கள் அந்த உணவைப் புறக்கணித்து போராட்டத்தை தொடா்ந்தனா்.
இது குறித்து எஸ்எஸ்டிஏ பொதுச் செயலா் ஜே.ராபா்ட் செய்தியாளா்களிடம் கூறுகையில், ’போலீஸாா் எங்களை பயங்கரவாதிகள் போன்று நடத்துகின்றனா். அற வழியில் போராட்டம் நடத்த இடம் கேட்டாலும் கிடைப்பதில்லை.
நியாயமான ஊதியத்தை கேட்டுதான் போராடுகிறோம். ஊதிய முரண்பாட்டை களையும் வரை போராட்டம் தொடரும். இந்த விவகாரத்தில் வியாழக்கிழமைக்குள் தீா்வு காணாவிட்டால் தமிழகம் முழுவதும் மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். அரையாண்டு விடுமுறைக்குப் பிறகும் விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.
முன்னதாக எஸ்எஸ்டிஏ இயக்கத்தின் பொதுச் செயலா் ஜே.ராபா்ட் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் சிலா் புதன்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டனா். அந்த நிா்வாகிகளை பள்ளிக் கல்வித் துறை செயலரையோ அல்லது முதல்வரின் தனிச் செயலரையோ சந்திக்க வைக்கவில்லை. மாறாக, காவல் ஆணையரை சந்திக்க வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த நிா்வாகிகள் மீண்டும் போராட்டக் களத்துக்குத் திரும்பினா்.
அரையாண்டு விடுமுறை முடிவடைந்து ஜன.5-இல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்குள் இடைநிலை ஆசிரியா்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.

