
மன்னார்குடியில் பாபா பக்ருதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இரண்டாவது முறையாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆசாத் தெருவைச் சேர்ந்தவர் சம்சுதீன் மகன் பாபா பக்ருதீன். இவரது வீட்டில் திங்கள்கிழமை காலை முதல் சென்னையிலிருந்து ஒரு ஆய்வாளர் தலைமையில் மூன்று பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள், சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாபா பக்ருதீன் தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் பாபா பக்ருதீன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறாரா மேலும் இவரது வீட்டில் தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உள்ள ஆவணங்கள், முக்கிய தடையங்கள் எதுவும் இருக்கிறதா என்பது குறித்தும் அவரது கைப்பேசி உரையாடல் மற்றும் தொலைப்பேசிகளை கைப்பற்றி என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கெனவே, கடந்த 2021 ஆம் ஆண்டு பாபா பக்ருதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து, இரண்டாவது முறையாக இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்ஐஏ அதிகாரிகளின் சோதனையையொட்டி அவரது வீட்டு வாசலில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், மன்னார்குடியில் காலை முதல் பரபரப்பான நிலை காணப்படுகிறது.
இதனிடையே பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கு தொடர்பாக, சென்னையில் மூன்று இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.