நெல்லையில் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை: 4,000 பேருக்கு வேலை! முதல்வர் தொடங்கி வைத்தார்

நெல்லையில் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை: 4,000 பேருக்கு வேலை! முதல்வர் தொடங்கி வைத்தார்
Published on
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ரூ.3,800 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டிபி (டாடா பவர்) சோலார் நிறுவனத்தில் சூரிய மின்சக்தி தகடு (சோலார் பேனல்) உற்பத்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வியாழக்கிழமை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ரூ.3,800 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டிபி சோலார் நிறுவனத்தில் சோலார் பேனல் உற்பத்தியைத் தொடங்கி வைத்தார். பின்னர், அவ்வளாகத்தைப் பார்வையிட்ட முதல்வர், பணியாளர்களிடம் கலந்துரையாடி, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த சோலார் பேனலில் வாழ்த்துகள் என எழுதி முதல்வர் கையொப்பமிட்டார்.

முன்னதாக, ரத்தன் டாடாவின் புகைப்படத்துக்கு மலர்தூவி முதல்வர் மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து, சிப்காட் வளாகத்தில் ரூ.2,574 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள விக்ரம் சோலார் நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

கங்கைகொண்டான் சிப்காட்டில் முதல்வர் தொடங்கிவைத்த சோலார் செல் மற்றும் மாடுல் (சூரிய மின்சக்தி தகடு) உற்பத்தி தொழிற்சாலையானது இந்தியாவிலேயே மிகப்பெரியதாகும். நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இத் தொழிற்சாலையானது 313 ஏக்கரில் அமைந்துள்ளது. இதன் உற்பத்தித் திறன் 4.3 ஜிகாவாட் ஆகும். இந்த நிறுவனத்தின் மூலம் 4,000 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

முதல்வர் அடிக்கல் நாட்டிய விக்ரம் சோலார் செல் மற்றும் மாடுல் உற்பத்தி தொழிற்சாலையால் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு, தங்கம் தென்னரசு, டி .ஆர். பி. ராஜா, திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் சி. ராபர்ட் புரூஸ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மு.அப்துல் வஹாப், நயினார் நாகேந்திரன், ரூபி. மனோகரன், டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், தொழில், முதலீட்டு வர்த்தகத் துறைச் செயலர் அருண் ராய், மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com