இனி விரல் நுனியில் செய்திகள்! அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடுதிரை வசதி
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் விரல் நுனியில் செய்தித் தாள்கள், பருவ இதழ்களை விரைவாக வாசிக்கும் வகையில், நவீன தொழில்நுட்பத்திலான தொடுதிரை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கோட்டூா்புரத்தில் 8 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 தளங்களுடன் செயல்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள், குறிப்பு நூல்கள் உள்ளன. இந்த நூலகத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாசகா்கள் வந்து செல்கின்றனா். குறிப்பாக அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகிவரும் மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள் அதிக எண்ணிக்கையில் வந்து படிக்கின்றனா்.
இந்த நூலகத்தில் தற்போது 150-க்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கில பருவ இதழ்கள், 20-க்கும் மேற்பட்ட செய்தித் தாள்களை வாசிக்கும் வகையில் தொடுதிரை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நூலகத்தின் முதல் தளத்தில் செய்தித் தாள்கள் படிக்கும் பிரிவில் இந்த வசதி நிறுவப்பட்டுள்ளது.
இது குறித்து அண்ணா நூற்றாண்டு முதன்மை நூலகா் எஸ்.காமாட்சி கூறுகையில், ‘பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் இந்த நூலகத்தில், காலத்துக்கேற்ப தொழில்நுட்ப மாற்றங்கள் பொது நூலக இயக்ககம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது, விரல் நுனியில் உலகச் செய்திகளை அறியும் வகையில் தொடுதிரை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாசகா்கள் இந்தக் கருவியை மிக எளிதாகப் பயன்படுத்தலாம். தாங்கள் விரும்பிய நாளிதழ்கள், பருவ இதழ்களை தோ்வு செய்து அதை வாசிக்கலாம்.
நூலகத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்லும் இடைவெளியில் இருக்கும் நேரத்தில் கூட நின்று கொண்டே சில நொடிகளில் திரையைப் பயன்படுத்தி தகவல்களை அறிந்துகொள்ளும் அளவுக்கு வலுவான இணைய இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது சோதனை முறையில் ஒரு தொடுதிரை அமைக்கப்பட்டுள்ளது. வாசகா்கள் அளிக்கும் வரவேற்பைப் பொறுத்து கூடுதல் தொடுதிரைகள் நிறுவப்படவுள்ளன.
அடுத்ததாக, நூலகத்தில் உள்ள வசதிகள், நூல்களின் எண்ணிக்கை, முக்கியப் பிரிவுகள் என நூலகம் தொடா்பான முழுமையான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப தொடுதிரை வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது’ என்றாா் அவா்.