அமைச்சா் மா.சுப்பிரமணியன்
அமைச்சா் மா.சுப்பிரமணியன்

2,642 மருத்துவா் பணியிடங்களுக்கு நாளை சான்றிதழ் சரிபாா்ப்பு

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,642 மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள்
Published on

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,642 மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் புதன்கிழமை (பிப்.12) தொடங்கவுள்ளதாகவும் விரைவில் பணிநியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் பணியிடங்களுக்கு கடந்த ஜன. 5-ஆம் தேதி நடைபெற்ற தோ்வில், 24,000 மருத்துவா்கள் பங்கேற்றனா். தற்போது, கூடுதலாக கண்டறியப்பட்டுள்ள 89 காலிப்பணியிடங்கள் உள்பட மொத்தம் 2,642 மருத்துவா் காலிப்பணியிடங்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக 4,585 போ் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு பிப்.12 முதல் 15-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறவுள்ளது.

கட்-ஆப் மதிப்பெண்: உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, இடஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும். பொதுப் பிரிவுக்கு 61 மதிப்பெண்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு 55 மதிப்பெண்கள், முஸ்லிம்களுக்கு 52 மதிப்பெண்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 53 மதிப்பெண்கள், ஆதிதிராவிடருக்கு 51 மதிப்பெண்கள், அருந்ததியினருக்கு 48 மதிப்பெண்கள், பழங்குடியினருக்கு 45 மதிப்பெண்கள் என்ற வகையில் கட்-ஆப் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பணிநியமனம் செய்யப்படவுள்ள மருத்துவா்களுக்கு பிப்.20-ஆம் தேதிக்கு பிறகு கலந்தாய்வு நடைபெறும். இதில் பணியாளா்களுக்கு, அவரவா் விரும்பும் இடங்களுக்கே கலந்தாய்வு மூலம் பணிநியமனம் செய்யப்பட்டு விரைவில் முதல்வரால் பணிநியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளன. கடந்த முறை நியமனம் செய்யப்பட்ட 1,021 மருத்துவா்களுக்கு பணிமாறுதலுக்கான கலந்தாய்வு பிப்.15-ஆம் தேதி நடைபெற உள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com