அணைக்கரை புதிய பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்!

அணைக்கரையில் கீழணையின் மேல் பகுதியில் கட்டப்பட்ட புதிய பாலத்தில் போக்குவரத்து தொடங்கப்பட்டது பற்றி...
அணைக்கரைக்கு மேல் பகுதியில் புதிய உயர்நிலை பாலம் திறக்கப்பட்டு இயக்கப்படும் வாகனங்கள்.
அணைக்கரைக்கு மேல் பகுதியில் புதிய உயர்நிலை பாலம் திறக்கப்பட்டு இயக்கப்படும் வாகனங்கள்.
Published on
Updated on
1 min read

சிதம்பரம்: தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் கீழணையின் மேல் பகுதியில் கட்டப்பட்ட புதிய பாலத்தில் வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1836ஆம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்பவரால் ஷட்டருடன் கூடிய பாலம் அமைக்கப்பட்டது. இந்த அணை தஞ்சை மாவட்டத்தில் இருந்தாலும் இதன் முழு கட்டுப்பாடு சிதம்பரம் நீர்வளத்துறையால் கண்காணிக்கப்படுகிறது.

இந்த அணையில் காவிரியின் ஒரு பகுதியில் இருந்து கொள்ளிடம் ஆற்றின் வழியாக திறக்கப்படும் தண்ணீர் தேக்கப்பட்டு வடவாறு, வடக்கு, தெற்கு, ராஜன் வாய்க்கால்கள், கும்கி மண்ணியாறு உள்ளிட்ட நீர் வழிகள் வழியாக திறக்கப்பட்டு கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மிகப் பழமையான இந்த பாலத்தின் மேல் பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு விரிசல் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அணை உடைந்தால் விவசாயம் கேள்விக்குறியாகும் என்ற நிலையில் பாலம் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டு ஒருவழிப்பாதையாக போக்குவரத்து மாற்றப்பட்டது.

இதன் காரணமாக சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் செல்பவர்கள் நீண்ட நேரம் பாலத்திற்கு அருகே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும் காலை நேரங்களில் பாலத்தை கடக்கும் போது கும்பகோணத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் என பலரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர். குறிப்பாக பண்டிகை காலங்களில் அணைக்கரை பாலத்தை கார் உள்ளிட்ட சொகுசு வாகனங்களில் கடந்து கும்பகோணம், தஞ்சாவூர் செல்பவர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும், வாகனங்கள் பல கிலோமீட்டர் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் அவல நிலையும் ஏற்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து விக்கிரவாண்டி, கும்பகோணம், தஞ்சாவூர், மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை 36 சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக கீழணையின் மேல் பகுதியில் இரண்டு கொள்ளிடங்களை இணைக்கும் மிகப்பெரிய பாலம் கட்டும் பணியும் தொடங்கப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் சென்றதாலும் மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும் பாலம் கட்டும் பணியில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டு வந்தது. பல ஆண்டு காலமாக பாலப்பணிகள் நிறைவடையாமல் இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கீழணை பாலம் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.

இதனால் சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி சென்றது. மேலும், கீழணை பாலத்தில் போக்குவரத்து குறைந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர். வருங்காலங்களில் கீழணைக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாது என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com