
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இணையவழி குற்றங்களின் எண்ணிக்கை இரண்டரை மடங்கு உயர்ந்துள்ளதாக மாநில காவல்துறையின் தரவுகள் கூறுகின்றன.
சைபர் குற்றங்கள் அல்லது இணையவழி பணமோசடிகள், குறிப்பாக டிஜிட்டல் கைது எனும் டிஜிட்டல் அர்ரெஸ்ட் மற்றும் ஆன்லைன் செயலி மோசடிகள் மூலமாக அதிகரித்து வருகின்றன. காவல்துறை தரப்பில் தொடர்ந்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் இணையவழி மோசடிகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன.
அவ்வாறு தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இணையவழி மோசடிகளின் எண்ணிக்கை இரண்டரை மடங்கு உயர்ந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
2022 ஆம் ஆண்டில் மாநில காவல்துறை பதிவு செய்த சைபர் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 2,082 ஆக இருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு 4,121 ஆகவும், 2024-ல் 5,385 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுதொடர்பான புகார்களில் வெறும் 3% மட்டுமே முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யப்படுவதாகவும் 50%க்கும் அதிகமான புகார்கள், சிஎஸ்ஆர் எனும் அடையாளம் காணாத குற்றத்தில் பதிவு செய்யப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் இணையவழி மோசடி குற்றங்களின் தரவுகளில், சிஎஸ்ஆர் வழக்குகளில் தமிழ்நாடு முதலிடத்திலும் எஃப்ஐஆரில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இருப்பினும் பதிவான மொத்த புகார்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது என அறிக்கையில் குறிப்பிடவில்லை.
இதற்குக் காரணமான இரண்டு காரணங்களில் ஒன்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு. குற்றங்கள் நிகழும்போது, மோசடிக்கு பயன்படுத்தப்படும் வங்கிக்கணக்குகளை முடக்கி, மோசடி செய்யப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை எஃப்ஐஆர் பதிவு செய்யாமலே பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பித்தர நீதிமன்ற உத்தரவு அனுமதிக்கிறது. இதற்கு அதிகாரப்பூர்வ தேசிய சைபர் அறிக்கை இணையதளத்தில் புகார் அளித்தால் போதும்.
இரண்டாவதாக, மோசடி செய்யப்பட்ட பணத்தொகை அதிகமாக இருந்தாலோ அல்லது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நெட்வொர்க் செயல்படுவதற்கான சான்றுகள் இருந்தால் மட்டுமே எஃப்ஐஆர் பதிவு செய்யப்படுகிறது.
உதாரணமாக, ஆவடியில் ஒரு வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் 13 வங்கிக் கணக்குகள், சுமார் 135 டிஜிட்டல் கைது மற்றும் ஆன்லைன் வர்த்தக மோசடிகளில் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் முடிந்தவரை விரைவாக புகார் அளிக்க வேண்டும் என்று கூறும் அதிகாரிகள், 2024-ல் தமிழகத்தில் சைபர் குற்றங்களில்தாகவும் இதில் 5% மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருப்பித் தரப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
இணைய சாதனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, வேகமான இணையம், அதிகளவு ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் ஆகியவையே இணையவழி மோசடிகள் அதிகரிப்பதற்கு காரணங்களாக உள்ளன.
லாவோஸ், கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளில் இணையவழி மோசடியில் ஏற்பட்ட வளர்ச்சியும் இதற்கு ஒரு காரணம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப் போன்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்கும், சைபர் வழக்குகள் தொடர்பாக வங்கதேசத்தில் ஒரு முக்கிய நபரைக் கண்டுபிடிப்பதற்கும் தமிழ்நாட்டின் சைபர் குற்ற அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
இருப்பினும், 'இதுபோன்ற வழக்குகளில் விசாரணை சவாலானது. மோசடி செய்யப்பட்ட பணத்தை திரும்பப் பெற, மோசடி செய்யப் பயன்படுத்தப்படும் நூற்றுக்கணக்கான வங்கிக்கணக்குகளை கண்டுபிடித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடித்துக் கைது செய்ய பல நாள்கள் பயணம் செய்ய வேண்டும். ஒரு வழக்கைக் கண்காணிக்க 10-15 நாட்கள் ஆகும். இது மற்ற அன்றாட வேலைகளுக்கு ஒரு தடையாக அமைகிறது' என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
தரவு பகுப்பாய்வு மற்றும் ஹாட்ஸ்பாட் ஆய்வு போன்றவை சைபர் குற்ற வழக்குகளில் பெரிதும் பயன்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க | பொரித்த உணவுகளைச் சாப்பிடுகிறீர்களா? எண்ணெய் பற்றிய கவனம் தேவை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.