முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பார்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பார்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
முல்லைப் பெரியாறு அணை (கோப்புப் படம்).
முல்லைப் பெரியாறு அணை (கோப்புப் படம்).
Published on
Updated on
1 min read

நமது நிருபர்

தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடர்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பார்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் சூர்ய காந்த், என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, "ஜன.3- ஆம் தேதி மத்திய அரசால் மீண்டும் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவின் தலைவர், ஒரு வாரத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களின் அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி, தமிழ்நாடு எழுப்பிய பிரச்னைகளை சுமுகமாகத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்' என்று தெரிவித்தது.

நீதிபதிகள் கூறியதாவது: மரங்களை வெட்டுவதற்கான அனுமதி, அணையை பழுதுபார்த்தல், அணுகு சாலை அமைத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் இணக்கமாகத் தீர்க்கப்படாவிட்டால், உச்சநீதிமன்றம் அதுகுறித்து தீர்ப்பளிக்கும்.

நடப்பாண்டு ஜன.3-ஆம் தேதி ஒரு புதிய மேற்பார்வைக் குழு அதன் தலைவருடன் நியமிக்கப்பட்டதாக எங்களுக்குத் தோன்றுகிறது. அக்குழு தமிழகத்தின் கோரிக்கைகளை ஆராய்ந்து, இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் தீர்வுகளைக் கண்டறிய வேண்டும்.

இருப்பினும், ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால், விடுபட்ட பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு இந்த நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க குழுவுக்கு உத்தரவிடப்படுகிறது. அந்த அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இரு மாநிலங்களுக்கிடையில் இணக்கமான வகையில் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும்.

இரண்டு மாநிலங்களுக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதியின் நலனுக்காக, முல்லைப் பெரியாறு அணை தொடர்பான அனைத்து மனுக்களையும் ஒன்றாக இணைத்து மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்.

ஆகவே, நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து, பொருத்தமான அமர்வின் முன் பட்டியலிடுவதற்காக தலைமை நீதிபதியின் முன் இந்த விவகாரத்தை வைக்க உத்தரவிடப்படுகிறது என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.

முல்லைப் பெரியாறு அணையின் உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு தாக்கல் செய்த அசல் வழக்கை விசாரித்தபோது உச்சநீதிமன்றம் மேற்கண்டவாறு கூறியது.

அணை விவகாரத்தில் 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. நீர்மட்டத்தை 142 அடியாக வைத்திருக்க அனுமதித்த உச்சநீதிமன்றம், அணையின் கட்டமைப்பு பாதுகாப்பானது என்றும், அவ்வப்போது அதன் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கு ஒரு மேற்பார்வைக் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டிருந்தது.

அணை எப்போதும் பாதுகாப்பானதாக இருக்கிறது என்று தமிழ்நாடு வாதிட்டபோதிலும், அது பாதுகாப்பற்றதாக இருப்பதாகவும் அதிக நீர்மட்டம் காரணமாக உடைப்பு ஏற்பட்டால் கீழ்ப்பகுதியில் வாழும் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் கூறி, அதை அகற்ற உத்தரவிட கேரள அரசு கோரி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com