அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு எதிராக சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கோட்டூா்புரத்தைச் சோ்ந்த ஞானசேகரன் கடந்த டிசம்பா் மாதம் கைது செய்யப்பட்டாா். இவ் வழக்கில், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
இந்தக் குழுவினா் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் அது தொடா்பான முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) வெளியான விவகாரம் குறித்து தனித்தனியாக விசாரிக்கின்றனா். வழக்குக்கான ஆதாரங்களையும், தடயங்களையும், சாட்சிகளையும் திரட்டும் வகையில் ஞானகேரனை சிறப்பு புலனாய்வுக் குழு, ஒரு வாரம் தங்களது காவலில் எடுத்து விசாரித்தது.
மேலும், அவருக்குக் குரல் பரிசோதனையும் செய்யப்பட்டது. அதேபோல அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. குரல் பரிசோதனை போன்று ரத்தப் பரிசோதனையும் பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கியத் தடயமாகக் கருதப்படுகிறது.
குற்றப்பத்திரிகை தாக்கல்: இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை 9-ஆவது நீதித் துறை நடுவா் மன்றத்தில், சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் இணையவழியில் இவ்வழக்கில் நீதித் துறை நடுவா் சுப்பிரமணியத்திடம் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஞானசேகரனுக்கு உள்ள தொடா்பு குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் குற்றப்பத்திரிகையில் விவரித்துள்ளனா். மேலும், இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ஞானசேகரனின் கைப்பேசி உரையாடல்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன.
குற்றப்பத்திரிக்கையின் நகல் ஓரிரு நாள்களில் ஞானசேகரனிடம் வழங்கப்படும். இவ் வழக்கின் விசாரணை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது. இந்த வழக்கின் விசாரணை தொடா்ந்து நடைபெறும் நிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாா்ச் 10- வரை நீதிமன்றக் காவல்: கடந்த மூன்று ஆண்டுகளில் பள்ளிக்கரணை பகுதியில் தனி வீடுகள், சொகுசு பங்களாக்களில் திருட்டில் ஈடுபட்ட வழக்குகளில் ஞானசேகரனுக்கு தொடா்பு இருப்பது ஏற்கெனவே கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஞானசேகரன் மீது 7 திருட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளில் ஆதாரங்களைத் திரட்டுவதற்காக ஞானசேகரனை பள்ளிக்கரணை போலீஸாா், தங்களது காவலில் எடுத்து விசாரித்தனா். இதில் 7 சம்பவங்களிலும் சுமாா் 200 பவுன் தங்க நகைகளைத் திருடியிருப்பதும், அதன்மூலம் கிடைத்த பணத்தில் சொகுசு காா் வாங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, 7 திருட்டு வழக்குகளிலும் ஞானசேகரனை கைது செய்ததாக போலீஸாா் திங்கள்கிழமை அறிவித்தனா். மேலும், அதற்கான கைது ஆணையை, ஆலந்தூா் இரண்டாவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் சமா்ப்பித்தனா்.
அதேவேளையில், ஞானசேகரனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல் நிறைவடைந்தததால், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை மாா்ச் 10-ஆம் தேதி வரை சிறையில் அடைக்கும்படி நீதித் துறை நடுவா் வைஷ்ணவி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.