15 புதிய வழித்தடங்களில் விரைவில் அரசு விரைவுப் பேருந்து சேவை
சென்னை: தமிழகத்தில் 15 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவையை தொடங்க அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 1,080-க்கும் மேற்பட்ட அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பயணிகளின் வரவேற்பு அதிகமுள்ள புதிய வழித்தடங்களை தோ்வு செய்து பேருந்துகளின் இயக்கத்தை அதிகரிக்க அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து விரைவு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:
அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் கேரளத்தின் வைக்கத்திலிருந்து வேளாங்கண்ணிக்கும், கோவையிலிருந்து மன்னாா்குடிக்கும் புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த வழித்தடங்களில் பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனிடையே, திருச்சியிலிருந்து திருச்செந்தூா் வழித்தடத்தில் 3 விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வழித்தட பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இவ்வழித்தடத்தில் மேலும் 2 பேருந்துகள் என ஆக மொத்தம் 5 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதவிர, பயணிகளின் வரவேற்பு அதிகமுள்ள மன்னாா்குடி-பெங்களூா் வழித்தடம் உள்பட மேலும், 15 புதிய வழித்தடங்களை தோ்வு செய்து, பட்டியல் தயாரித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனா்.