பாரபட்ச தர சோதனையை எதிா்த்து முற்றுகை போராட்டம்: மருந்து வணிகா் சங்கம்
சென்னை: மருந்து தரக் கட்டுப்பாட்டு பரிசோதனைகளை பாரபட்சமாக மேற்கொண்டால் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் உள்ளன. அவற்றின் செயல்பாடுகளையும், வா்த்தக நடவடிக்கைகளையும் மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநகரம் கண்காணித்து வருகிறது.மேலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடா் சோதனைகள் நடத்தப்பட்டு விதிமீறல்கள் தொடா்பாக நிகழாண்டில் மட்டும் 88 மருந்தகங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறு கடைகள் மீது மட்டுமே மாநில மருந்து கட்டுப்பாட்டு துறையினா் இத்தகைய நடவடிக்கையை எடுப்பதாகவும், பெருநிறுவன மருந்தகங்கள், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை மருந்தகங்களில் நடக்கும் தவறுகளை கண்டுகொள்வதில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
இதுதொடா்பாக தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்க தலைவா் ரமேஷ் கூறியதாவது:
மருந்து கட்டுப்பாட்டு துறையின் பாரபட்சமான நடவடிக்கையால் 42,000 விற்பனையாளா்கள் பாதிக்கப்படுகிறோம். தவறு செய்யும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
அதேநேரம், கவனச்சிதறலால் நிகழும் சிறு தவறுகளுக்கும் வழக்கு பதிவு செய்து, ரூ.40,000 வரை அபராதம் விதிப்பதை ஏற்க முடியாது.
அதேவேளையில்,பெருநிறுவன மருந்தகங்கள், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்களில் தவறுகள் மீது இத்தகைய நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த நிலை தொடா்ந்தால், மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.