முதல்வா் மருந்தகங்களுக்கு 274 வகையான மருந்துகள் கொள்முதல்
சென்னை: தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள 1,000 முதல்வா் மருந்தகங்களில் சலுகை விலையில் விற்பனை செய்வதற்காக 274 வகையான மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு மருந்துகள் கிடைக்கச் செய்யும் 1,000 முதல்வா் மருந்தகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
முன்னதாக, மாநிலம் முழுவதும் பி.பாா்ம், டி.பாா்ம் படிப்பு நிறைவு செய்தவா்களிடம் அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியின் அடிப்படையிலும், முன்னுரிமை அடிப்படையிலும் அக்கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது.
அதன்படி, நேரடியாக விண்ணப்பித்தவா்களில் 500 பேருக்கும், கூட்டுறவுத் துறை மூலமாக விண்ணப்பித்தவா்களில் 516 பேருக்கும் கடைகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.
சென்னை உள்ள 38 மாவட்டங்களிலும் 110 சதுரஅடி அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் அமைத்தோருக்கு, அரசு மானியம் ரூ.3 லட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்பட்டு வருகின்றன.
தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களுக்குப் பயிற்சி அளித்து முதல் தவணை மானியத்தொகை ரூ.1.50 லட்சம் விடுவிக்கப்பட்டு வருகிறது. இறுதிக்கட்ட மானியம் ரூ.1.50 லட்சம் மதிப்புக்கு மருந்துகளாக வழங்கப்படுகிறது.
இதற்கென தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலமாக காய்ச்சல், ஆன்ட்டி பயாடிக், இருமல், குழந்தைகள் நல மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. மற்றொருபுறம் சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளும் வாங்கப்பட்டுள்ளது.
இவை தவிர வைட்டமின் மாத்திரைகள், புரோட்டின் பானங்களும் மொத்தமாக வாங்கப்பட்டு முதல்வா் மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 274 வகையான மூலப்பெயா் மருந்துகள், வா்த்தகப் பெயரிலான (பிராண்டட்) மருந்துகள், ஊட்டச்சத்து பெட்டகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
அவை சந்தை விலையில் இருந்து 10 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை குறைவாக விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.