
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறவிருக்கும் மகா சிவராத்திரி விழாவுக்கு தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில், இந்தாண்டு வருகின்ற 26ஆம் தேதி சிவராத்திரி விழா கொண்டாடப்படவுள்ளது.
இந்த விழாவில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொள்ள உள்ளனா்.
இந்த நிலையில், ஒலி மாசு ஏற்படும் வகையில் மகா சிவராத்திரி விழாவை ஈஷா யோகா மையம் நடத்துவதாகவும், இதற்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் ராஜசேகர் அடங்கிய அமர்வு, விதிமுறைகளை பின்பற்றி ஈஷா யோகா மையம் விழாவை நடத்துகிறதா என்பதை ஆராய்ந்து அறிக்கை அளிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் விதிமுறைகளை பின்பற்றிதான் விழா நடத்தப்படுவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளித்தது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தீர்ப்பாயத்தின் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மக்களும் ஒலி, ஒளி மாசு ஏற்படுவதாக எந்த புகாரும் அளிக்கவில்லை எனத் தெரிவித்தனர்.
மேலும், ஈஷா விழாவுக்கு தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.