'வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு' - எஸ். ரகுபதி

தொகுதி மறுசீரமைப்பு மூலமாக வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு என அமைச்சர் எஸ். ரகுபதி கூறியுள்ளார்.
Minister S. Raghupathi
Published on
Updated on
1 min read

தொகுதி மறுசீரமைப்பு மூலமாக வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு என சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தமிழ்நாடு மட்டுமல்லாது மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் தென் மாநிலங்கள் அனைத்தையும் தண்டிக்கும்விதமாக 2026 மக்கள் தொகை அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த துடித்துக்கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு.

2024 பொதுத் தேர்தலிலேயே பாஜகவை இந்திய மக்கள் நிராகரித்ததன் காரணமாக மெஜாரிட்டியை இழந்து இரு மாநில கட்சியின் தயவில் மைனாரிட்டி ஆட்சியை நடத்தி வருகிறது.

வரப்போகும் 2029 பொதுத் தேர்தலில் பாஜகவின் தோல்வி உறுதியானதால் எப்படியாவது வெற்றி அடைய வேண்டும் என்ற வெறியோடு பாஜக ஆளும் வட மாநிலங்களுக்கு சாதகமாக மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை நிறைவேற்றி பாஜக நுழைய முடியாத தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளை குறைத்து பின்வாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க சதி செய்கிறது பாஜக அரசு.

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக தமிழ்நாட்டின் 8 தொகுதிகள் உள்ளிட்ட தென் மாநிலங்கள் 26 இடங்களை இழக்க நேரிடும்.

ஆனால் அதுவே உத்தரப் பிரதேசம் 11 இடங்களையும் , பிகார் 10 இடங்களையும் , ராஜஸ்தான் 6 இடங்களையும் கூடுதலாகப் பெறும். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிப்பை நல்கிவரும் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவதத்தைக் குறைத்துத் தண்டிப்பது மிக மிக மோசமான செயல்.

வரலாற்றில் மிகப் பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு. இதை முளையிலேயே கிள்ளி எறியாவிடில் நமக்கான எந்த உரிமைகளையும் , அரசியல் தீர்வுகளையும் பெற முடியாமல் போய்விடும்.

தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தென்னிந்திய மக்களும் சொந்த நாட்டிலேயே இரண்டாந்தர குடிமக்கள் ஆக்கப்படுவோம்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டிய நேரமிது. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நாம் ஒருங்கிணைந்து செயலாற்றுவோம், நம் உரிமைகளைக் காப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் இதனால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 8 தொகுதிகளை இழக்க நேரிடும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

மேலும் மார்ச் 5 ஆம் தேதி இதுதொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com