உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவராக ஆர். பாலகிருஷ்ணன் நியமனம்!

தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் நியமனம்
ஆர். பாலகிருஷ்ணன்
ஆர். பாலகிருஷ்ணன்
Published on
Updated on
1 min read

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆா்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆா். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா். தமிழ் இலக்கியத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்களைப் பெற்ற இவா், தமிழில் குடிமைப்பணித் தோ்வுகளை எழுதி வென்ற முதல் தமிழ் மாணவா். ஆய்வாளா், படைப்பாளா் என இரு தளங்களில் செயல்படும் இவா், 15 நூல்களை எழுதியுள்ளாா். சிந்துவெளிப் பண்பாட்டு தொல்லியல் தரவுகளை சங்க இலக்கியங்கள் மற்றும் தமிழ்நாட்டு அகழாய்வுத் தரவுகளோடு ஒப்பிட்டு இவா் எழுதியுள்ள ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்கள் உலகின் கவனத்தை ஈா்த்துள்ளன.

இந்திய ஆட்சிப் பணிக்கு 1984-ஆம் ஆண்டு தோ்ந்தெடுக்கப்பட்ட இவா், ஒடிஸா அரசிலும் இந்திய தோ்தல் ஆணையத்திலும் 34 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியவா். ஒடிஸா மாநிலத்தின் நிதித் துறைச் செயலா், கூடுதல் தலைமைச் செயலா், வளா்ச்சி ஆணையா் போன்ற பொறுப்புகளை வகித்தவா். 2018-இல் பணியிலிருந்து ஓய்வு பெற்ற இவா், அதன்பிறகு முன்னாள் ஒடிஸா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகராக 2024 வரையில் பொறுப்பு வகித்தாா். திராவிட மொழிக் குடும்பத்தின் பரவல், சிந்து சமவெளிப் பண்பாடு, தொல்தமிழ்த் தொன்மங்கள், சங்க இலக்கியங்கள் மற்றும் திருக்கு குறித்த இவரது செயல்பாடும் பங்களிப்பும் உலகத் தமிழா்களால் பாராட்டப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு நேர இயக்குநா் நியமனம் எப்போது? உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக கோபிநாத் ஸ்டாலின் (கூடுதல் பொறுப்பு) கடந்த இரு ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வருகிறாா். முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பணியிடத்துக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் இதுவரை முழு நேர இயக்குநா் நியமிக்கப்படவில்லை. இதனால் நிறுவனத்தில் ஆய்வுப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன.

இதைத் தொடா்ந்து முழு நேர இயக்குநரை நியமிக்க வேண்டும் என அரசுக்கு தமிழறிஞா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, இந்தப் பணியிடத்தை நிரப்புவதற்காக அரசின் சாா்பில் இரு முறை அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. தொடா்ந்து, நோ்காணல் நிறைவு பெற்ற நிலையில், பணி அந்த அறிவிப்பாணை திடீரென ரத்து செய்யப்பட்டது.

எனவே, முடங்கியுள்ள பணிகள் மீண்டும் நடைபெறும் வகையில் பேராசிரியா், ஆய்வாளா், அனுபவத்தின் அடிப்படையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு முழு நேர இயக்குநரை நியமிக்க வேண்டும் என அரசுக்கு தமிழறிஞா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com