இரு மொழிக் கொள்கையால் வேலைவாய்ப்புகளை இழக்கும் இளைஞர்கள்: ஆளுநர் வேதனை

தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து..
மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என். ரவி.
மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என். ரவி.
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு பின்பற்றும் இருமொழிக் கொள்கையால் இங்குள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழப்பதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்துக்கு கல்வி நிதி அளிக்கப்படும் என்று மத்திய கல்வியமைச்சர் தெரிவித்ததற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், இருமொழிக் கல்விக் கொள்கையை எவ்வளவு ஆயிரம் கோடிக் கொடுத்தாலும் ஏற்க மாட்டோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், இளைஞர்கள், ஸ்டார்ட் அப் நிறுவன தொழில்முனைவோர்களுடன் நடத்திய ஆலோசனை குறித்து பதிவிட்டுள்ள ஆளுநர், தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்திருப்பதாவது:

“ஏராளமான சிரமங்கள் மற்றும் முறைசார் தடங்கல்கள் இருந்தபோதிலும் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் இவர்களின் நேர்மறையான ஆற்றலையும் தொழில்முனைவுத் திறனையும் காண்பது ஊக்கமளிப்பதாக இருந்தது.

இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது, ஆனாலும் இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது.

தொழில்மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கிறார்கள்.

இளைஞர்களிடையே காணப்படும் போதைப்பொருள்/போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் சிக்கல்கள் தீவிரமானவை.

ஊடக தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட போராட்டங்களுக்கு மாறாக, தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது.

மாநில அரசின் கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள்.

துரதிருஷ்டவசமாக ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள். இது உண்மையிலேயே நியாயமற்றது. மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com