ஆளுநர் தமிழர்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: அமைச்சர் ரகுபதி

ஆளுநர் ஆர்.என். ரவியின் பதிவுக்கு அமைச்சர் ரகுபதி விமர்சனம்.
அமைச்சர் ரகுபதி, ஆளுநர் ஆர். என். ரவி.
அமைச்சர் ரகுபதி, ஆளுநர் ஆர். என். ரவி.
Published on
Updated on
1 min read

ஆளுநர் ரவி தமிழர்களுக்கு மொழியுணர்ச்சியை பற்றி பாடம் எடுக்க வேண்டாம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு பொருளாதாரத்திலும் கல்வியிலும் பெற்றிருக்கும் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தமிழ்நாட்டின் மீது வெறுப்பை உமிழ்வதையே தனது கடமையெனக் கருதி செயலாற்றி வருகிறார் ஆளுநர் ரவி.

தனது அரசியலமைப்பு கடமைகளை மறந்து ஆதாரமற்ற அவதூறுகளை வைத்து தமிழ்நாட்டை இழிவுப்படுத்தும் அரசியலை செய்வதற்காகவே மத்திய பாஜக அரசு ஆர்.என்.ரவியை ஆளுநராக வைத்திருக்கிறது.

தனது சமூக வலைதளக் கணக்கை இதற்காகவே பிரதானமாக பயன்படுத்திவரும் ஆளுநர் ரவி தனது இன்றையப் பதிவில், “இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது, ஆனாலும் இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது. தொழில்மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கிறார்கள்” எனக் கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு எதில் பின் தங்கியுள்ளது என ஆளுநர் ரவியால் சொல்ல முடியுமா?

இதையும் படிக்க: திமுக அமைச்சர்களும், மாவட்ட செயலர்களும் குறுநில மன்னர்கள் போல்... இபிஎஸ் குற்றச்சாட்டு

கல்வியில், மருத்துவத்தில், பொருளாதாரத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி இந்திய மாநிலங்கள் எதனோடும் ஒப்பிட முடியாத அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதை மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களே சொல்லும், அதையெல்லாம் ஆளுநர் ரவி படித்தால்தானே? படித்தாலும் தமிழ்நாட்டின் மீது வெறுப்பேறிய கண்களுக்கு அவையெல்லாம் எப்படித் தெரியும்?

தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சி இருமொழிக் கொள்கையினால் சாதித்தவை, தமிழ்நாட்டில் எப்படியாவது ஹிந்தியை திணிக்கலாம் அதற்கு புதிய கல்விக் கொள்கையை ஒரு வழியாக வைத்து உள்நுழையலாம் எனும் ஆதிக்கவாதிகளின் சதியை அறியாதவர்களா தமிழர்கள்?

தமிழ்-தமிழ்நாடு-தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றின் மீது தொடர்ந்து வெறுப்பை உமிழும் ஆளுநர் ரவி தமிழர்களுக்கு மொழியுணர்ச்சியைப் பற்றி பாடம் எடுக்க வேண்டாம்.

சநாதனத்தையும் சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டில் காலூன்றச் செய்திட குட்டிக்கரணம் போடும் ஆளுநரின் நடவடிக்கைகள் தமிழ் மண்ணில் வேறூன்றவில்லை. அப்படித்தான் மும்மொழிக் கொள்கையும் மூக்கறுபட்டு நிற்க போகிறது.

மொழித் தேர்வு எது? மொழித் திணிப்பு எது? என்பது எங்களுக்கு தெரியும், இந்த நாடகங்கள் எல்லாம் இங்கே எடுபடாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com