அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: கைதானவரின் அதிர்ச்சியூட்டும் குற்றப் பின்னணி!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனின் குற்றப் பின்னணி பற்றி..
கை, காலுக்கு மாவுக்கட்டு போட்ட நிலையில் ஞானசேகரன்.
கை, காலுக்கு மாவுக்கட்டு போட்ட நிலையில் ஞானசேகரன்.
Published on
Updated on
1 min read

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் குற்றப் பின்னணி தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகிறது.

இவர் கடந்த 2018ஆம் ஆண்டு மதுராந்தகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரைக் கைது செய்த வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர் என்ற அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம், தொழிலதிபர் ஒருவரைக் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஞானசேகரனும் ஒருவர் என்று தெரிய வந்திருப்பதாகவும், இந்தச சம்பவத்தில் ஞானசேகரனின் தாய் மற்றும் மனைவியும் உடந்தையாக இருந்ததாகக் கைது செய்யப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

மதுராந்தகத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரை, அவரது காருடன் ஞானசேகரன், அவரது கூட்டாளிகள் சுரேஷ் மற்றும் முரளி ஆகியோர் புதுச்சேரிக்குக் கடத்திச் சென்று ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதில் பாதித் தொகையை மதுராந்தகம் மேம்பாலத்தின் மீது, அவரது குடும்பத்தினர் கொடுத்தபோதும், ஞானசேகரன் கும்பல் அதனைப் பெற்றுக்கொண்டு முத்துக்குமாரை விடுவிக்க மறுத்துள்ளது. பிறகு மொத்தத் தொகையை குடும்பத்தினர் அளித்தபோது, மறைந்திருந்த காவல்துறையினர், ஞானசேகரன் உள்ளிட்டவர்களை கைது செய்து விசாரணை நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், மற்றொரு கடத்தல் வழக்கிலும் ஞானசேகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாகவும், கொள்ளை, திருட்டு என சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு காவல்நிலையங்களில் ஞானசேகரன் மீது 14 வழக்குகள் இருப்பதாகவும் அதில் 6 வழக்குகளில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அண்ணா பல்கலை. சம்பவம்

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா். ஞானசேகரனால், வேறு எந்த பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து, ஞானசேகரன் கைப்பேசியை கைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனா். அந்த கைப்பேசியில் ஞானசேகரன் ஏற்கெனவே சில பெண்களுடன் இருக்கும் ஆபாச விடியோக்கள் இருந்ததாகவும், அந்த விடியோக்களின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதில் சில விடியோக்களில் இருக்கும் பெண்கள், பாலியல் தொழில் செய்பவா்கள் என்பதும், சில விடியோக்களில் இருப்பது திருநங்கைகள் என்பதும் தெரியவந்துள்ளது.

அதேவேளையில், சில விடியோக்களில் இருக்கும் பெண்கள் யாா் என்பதை காவல்துறையினரால் கண்டறிய முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

அந்த பெண்கள் குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். மேலும், அந்த பெண்களையும் மிரட்டி ஞானசேகரன் பாலியல் வன்கொடுமை செய்தாரா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடா்பாக ஞானசேகரனின் 3 மனைவிகளிடமும், அவரது தோழியிடமும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com